பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு


பிரையாதின் சுருக்கமோவெனில், கொளம்பு அநுராஜபுரத்தில் ஓர் பறையனை சில வேளாளர்கள் கூடி அடித்து அவன் வஸ்திரங்களை எடுத் தெரிந்துவிட்டதாகப் பிரயாது கொடுத்ததின் பேரில் அவனை அடித்ததையும், அவன் வஸ்திரங்களை எடுத்தெரிந்துவிட்டதையும் அதிகாரி விசாரியாது நீ வழக்கத்திற்கு விரோதமாகக் குடைபிடித்துச்சென்றது தப்பிதமென்று கேசை தள்ளிவிட்டாராம். இதன் காரண காரியம் யாதும் விளங்கவில்லை. தற்காலம் பராயசாதியோர்களால் பறையர்களென்று அழைக்கப்பெற்ற பூர்வ திராவிடர் களுக்கு குடை, செடி முதலிய 18-விருதுகளும்; யானை குதிரைமீது ஊர்வலம் வரும் சுவாதீனமுமிருக்க அவனை குடைபிடிக்கக்கூடாதென்றும், அவனுக்கு வழக்கமில்லாச் செயலென்று கூறியவர்கள் எந்த சாஸ்திர ஆதாரத்தைக் கொண்டும் அனுபவத்தைக் கொண்டும் கூறினரோ விளங்கவில்லை.

அவரவர்கள் சாதி உயர்வையும் தாழ்வையும் அவரவர்கள் வீடுகளிலும் வாசல்களிலும் வழங்க வேண்டுமேயன்றி பிரிட்டிஷ் ஆட்சியின் பயிரங்க வீதிகளிலும், இராஜாங்க சாலைகளிலும் வழங்குதற் செல்லாது. ஆதலின் அநுராஜபுர ஏழைக்குடிகள் இப்பிரையாதை மேலதிகாரிகளாம் ஆங்கில துரை மக்களிடம் கொண்டுபோவதே அழகாகும்.

- 3:41; மார்ச் 23, 1910 –

42. இந்துதேச விவசாய வாசிகளே கேண்மின்

திரிகடுகென்று வழக்கும் சுக்கு, மிளகு, திப்பிலியில் மிளகென்னும் வஸ்துவை நமது தேசத்துப் பயிரிடுங்குடிகளாம் வேளாளர்கள் மிகு உன்னத பயிரிட்டு விருத்தி செய்து அதன் பலனை அனுபவித்து வந்தார்கள். மிளகென்னும் வஸ்துவின் குணா குணமும் அதன் பலனும் அசீரணம், அகாலமலம், கள்ள நோய், செவியில் இரத்தம் வடிதல், சோணிதவாதம், குய்யரோகம், பக்கசூலை, இருமல், குளிர் சுரம், பாண்டு, கபம், கிராணி, குன்மம், வாயு, அரோசகம், பயித்தியம், மூலம், சன்னிபாதம், மயக்கம், பிரமேகம் முதலிய கஷ்டரோகங்களை நீக்கி மனுக்களுக்கு மிக்க சுகத்தை அளிக்கக்கூடிய வஸ்துவாயிருந்தபடியால் சகல தேசத்தோரும் நமது தேசத்திற்கு வந்து மிளகை ஏற்றுமதி செய்து வந்ததுமன்றி நாளது வரையிலேற்றிச் செல்லுகின்றபடியால் பூமியை உழுது பயிரிடும் வேளாளர் ஒவ்வொருவரும் மிளகு பயிரை விருத்திச் செய்ய வேண்டுகிறோம்.

பதார்த்த குணசிந்தாமணி - மிளகின் குணாகுணம்

சீதசுரம் பாண்டு சிலேத்மங் கிராணி குன்மம் / வாதருசி பித்தமா மூல - மோதுசந்தி
ஆசன வுள்மூல மடமேகங் காசமிவை / நாசங் கறிமிளகினால்.
கோணுகின்ற பக்கவலி குய்யரோகம்வாத
கோணிதன் கழுத்திற்குட் டோன்றுநோய் - காணரிய
காது நோய் மாதர் குன்மங் காமாலை மந்தமென்றீ
ரேது நோய்காயிருக்கிலீங்கு காய்
பதார்த்தகுண விளக்கம் - மிளகு
குளிர்ந்திடும் சத்திகுன்மம் குலைவலி குருதி மேகம்
அழிந்திடு மிருமவீளை யிளப்புடன் தாகம் நீங்கும்
சுழிந்திடு பீநசங்கள் சொக்கிடு மந்த மேகம்
சொழிந்திடுந்தீபனங்கள் கூறியமிளகினாலே.

- 3:41; மார்ச் 23, 1910 –

43. இந்திரர், இந்திராணி

வினா : ஐயா, தமதரியப் பத்திரிகையில் இந்திரரென்றும், இந்தி ராணியென்றும் அரம்பையென்றும், ஊர்வசியென்றும் வகுத்துள்ளப் பெயர்களைக்கண்டு மிக்க வியப்படைகின்றேன். அதாவது பராயமதஸ்தர்கள் தேவயிந்திரனென்னும் ஓர் வானவர்க்கரசனிருந்தானென்றும், அவன் மனைவி இந்திராணி என்றும், தெய்வலோகத்தில் நாட்டியஞ் செய்வோர் அரம்பை ஊர்வசி என்றுங் கூறுகின்றபடியால் பௌத்த தன்மத்திலும் அப்பெயர் களுண்டோ என்னும் சந்தேகம் தோன்றி அதினந்தரார்த்தத்தை விளக்கி யாட்கொள்ளும்படி வேண்டுகிறேன்.

வீ. இராஜகோபால், வேலூர்.