பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு

கொண்டாடப்பெற்ற புத்ததன்மமானது அபுத்தர்களின் கூட்டமிகுதியால் சிலகால் மறைந்து மறுபடியும் சத்தியவாசிகளால் வெளிதோன்றி அசத்தியங் களைக் கண்டித்து வருகின்றபடியால் அசத்தியர்களும் அசப்பியர்களும் அவற்றை தூஷணை மொழியென்று தூற்றித் திரிவதுமன்றி சில வீணர்களும் தங்கள் மனம் போனப்போக்கில் வரைந்து வருகின்றார்கள்.

பொய்யாகிய மதக்கடை பரப்பி சீவிப்போர் புத்தரையும், புத்த தன்மத்தையும் வீண்மொழி கொண்டு கண்டித்தும், தூஷித்தும் புத்த கங்களெழுதியும் இருப்பது பிரத்தியட்ச காட்சியாயிருக்க பெளத்தர்கள் புறமதத்தை தூஷிக்கின்றார்களென்று கூறுவது அவர்கள் பொய்யாகிய மதக்கட்டில் ஈதோர் கட்டென்றறிந்துக்கொள்ளவும். நீதியும் நெறியும் அமைந்த பிரிட்டிஷ் ஆட்சி எங்கும் நிறைந்துள்ளபடியால் சாத்திய நிலையாம் புத்ததன்மம் பரவுவதற்கும், மெய்யொளி வீசுவதற்கும் ஆதாரமாயிருக்கின்றது.

அம்மெய்யொளியால் மதக்கடை பரப்பி சீவிப்போர் பொய்ப்போர்வை யாவும் பெரிதென விளங்கி தங்கள் மதத்தோரே தங்கள் பொய்களை கண்டிக்க வெளி தோன்றிவிட்டபடியால் இவைகள் யாவும் பெளத்தர்கள் செயலெனப் புறங்கூறித் திரிகின்றனர்.

பெளத்தர்கள் முன்னிலையில் தோன்றும் அந்நியங்களை நியாய வாயலாகக் கண்டித்து நீதி பகராதிருப்பார்களாயின் பூர்வ பௌத்தர்களை கழுவிலும் கற்காணங்களிலும் ஏற்றி வதைத்ததைப் போல் வதைத்தே யிருப்பார்கள் ஆயினும் அத்தகையப் பொய்ப் புராணக் கட்டுக்கதைகளுக் கெல்லாம் பிரிட்டிஷ் நீதியின் செங்கோல் இடங்கொடுக்காதென்றுணர்ந்து மற்ற மதத்தோருக்கு புத்ததன்மத்தின் மீது ஐயீஷ்டமுண்டாமாறு பெளத்தர்கள் மற்ற மதத்தை தூஷிக்கின்றார்களென்று பொய்மொழி கூறி புலம்பு கின்றார்கள். சதாகாலம் பொய்யைச்சொல்லி சீவிப்போர்க்கு ஈதோர் பொய்யாகாவென்று அறிந்துக் கொள்ளுவீராக.

- 3:43; ஏப்ரல் 6.1910 –

45. நைடதம்

வினா : ஐயா, 9 - பிப்ரவரி 1910 புதவாரம் வெளியான தமிழன் பத்திரிகையில் அந்தணர் புசிப்பின் வினாவிற்கு நைடதம் நாட்டுப்படலம்.

மாதர்மென் முல்லையீன்ற / வான்முக யனையமூரல்
கோதறு கருணை தீம்பால் / கொழுங்களி யிவற்றினோடும்
ஆதுலர் யாவரென்ன / வதிர்குரன் முரசிற் சாற்றி
வேதியர்க் கருத்திப்பின்னர் /விருந்தொடு நுகர்வர்மாதோ

என்னும் பாடலால் விடையளித்திருக்கிறீர். நைடதமாகிய நளசக்கர வர்த்தியின் சரித்திரம் உண்மையில் நடந்தக் கதையா? உண்மெ யென்றாலோ, இந்திரனென்னும் தேவனும் இமயனென்னும் தேவனும் அக்கினி என்னும் தேவனும் இருந்தார்களென்றும் இருக்கிறார்களென்றும் சொல்லாமலே விளங்குகிறது. அத்துடன் அவர்களெல்லாம் மனிதரைவிட பொல்லாத துற்குணமுடையவர்கள் என்பதற்கு நைடதமே சாட்சியாக நிற்கிறது.

நைடதம் நளன் தூதுப்படலம் 15-ம் பாடல்

ஐந்தரு நீழல் வேந்தனார் கலிக்கிறைவன் வெய்ய
செந்தழற் கடவுடென்னிற் றிசையுறை தருமனன்னோர்
பைந்தொடி நின்னை வெட்டுப் படைமதன மகழியியச்
சிந்தனை பிறிதாய் மாழ்கித் தெருமா லெய்துகின்றார்

இப்பாடலால் தேவர்களென்னும் இன்னால்வரையும் விபச்சாரர் களாகக் காட்டுகிறது. ஆனால் காம மோக லோபமென்னும் தீவினைகளை அகற்றி தன்னையரிந்து உண்மெயுற்று திரிகாலங்களையும் உணர்ந்து பிராமணமாம் நற்செயல்வீசி சருவசீவர்களுக்கும் உபகாரியாய் விளங்கி அந்தணரென்றும், பிராமணரென்றும் விவேகிகளால் அழைக்கப்பட்டு சருவசீவர்களும் தேவரென்று வணங்கும் ஏழாவது தோற்றத்தோரே தேவர்களென்றும் அவர்கள் நிறைந்த வியாரங்களே தேவசபையென்றும் இந்திரசபை என்றும் நமது "தமிழனில்" பலமுறையும் வெளியாகி வருகிறது. பல ஞான நூற்களும்