பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு

மெய்யென நம்பி மோசம் போகலாகாது. ஜப்பானியரை குரங்கென்று இழிவு கூறியவர்கள் சிலதினங்களுக்குள் அவற்றை மறந்து அவர்களைப் புகழ்வதே போதுஞ் சான்றாகும்.

சிலகால் குரங்கினின்றே மனிதன் தோன்றியுள்ளபடியால் ஜப்பானியரைக் குரங்கென்று கூறினோமென்பாராயின் அன்னோர் தோன்றிய பிரம்மாவையும் பெருங் குரங்கென்றே சொல்லவேண்டி வரும் அல்லது இந்தி யாவிலுள்ளவர்கள் யாவரும் குரங்கினின்று வந்தவர்களன்று. பரிசுத்த பிரம்மாவிடத்தினின்று தோன்றினவர்களென்பாராயின், பறையனும் அவரிடத்தினின்று தோன்றியிருத்தல் வேண்டும். அங்ஙனமிருக்குமாயின் பறையனைத் தோன்றுவித்த பிரம்மாவையும் பெரும் பறையனென்றே கூறல் வேண்டும். பறையன் பிரம்மாவிடம் தோன்றினவனல்லவென்பாராயின் அவன் சுயம்பாய மனுகுலத்தில் தோன்றினவனென்றே கூறல் வேண்டும். அத்தகைய வெதார்த்த மனுகுலத் தோன்றலை இழிந்தோ னென்று கூறுவபனிழிந் தோனன்றி மனுகுலத்தோன்ற லிழிந்தவனாக மாட்டான். அவனது செயல்கள் யாவும் சிறப்பைத் தருமேயன்றி நாணமற்ற யிழிவைத் தரமாட்டாதென்பது திண்ணம். சோம்பேறிகளும், நாணமற்றவர்களும், வஞ்சகர்களும், பொய்யர்களும் ஒன்று கூடிக்கொண்டு தேகவுழைப்பும், சுருசுருப்பும், நாணமும் மெய் மொழியும் நிறைந்த வாறு கோடி மேன் மக்களை பறையரென்றும், தீயரென்றும், சண்டாளரென்றும் இழிவு கூறிவருவதை யானைகள் உறங்குவது போலும், புலிகள் பதுங்குவது போலும், வில்லுகள் வளைவதுபோலும், ஆட்டுக்கடாக்கள் பிந்துவது போலும் கேட்டுக்கொண்டு அடங்கி நிற்பது அவ்வளவும் பாச்சலுக்கென்றே தெரிந்து நிதானித்து வார்த்தையாடாது வீணே தூற்றித் திரிகின்றார்கள். அங்ஙனம் நிதானியாது மேலுமேலும் தூஷித்தும், இழிவுபடுத்தியும், பலவகை யிடுக்கங்களைச் செய்தும் பாழ்படுத்தியும் வருவார்களாயின் யானை உறங்குவது போலிருத்தல் அதன் வேகத்தைக் காட்டு தற்கென்றும், ஆட்டுக் கடா பின்னிடுதல் அதன் மோதுதலுக்கென்றும், வில் வளைதல் அதன் வேகத்துக்கென்றும் அறிகுறியாயது போல் பூர்வ பௌத்தர்களாகும் மேன்மக்கள் சகலரது இழிச்சொல்லுகளுக்கு மடங்கி நிற்பது அவர்களது மேன்மெய் தங்கிய வொடுக்கமென்றேயுணர்ந்து தங்களைக் கார்த்துக் கொள்ளாது வீணே இழிவு கூறிவருகின்றார்கள். இம்மட்டிலுந் தங்களைக் கார்த்துக் கொள்ளாது ஜப்பானிலும் பறையனிருக்கின்றான் ஜாவாவிலும் பறையனிருக்கின்றானென யிழிவுப்படக் கூறியின்னும் பலவகை யிடுக்கங்களைச் செய்யவாரம்பிப்பார்களாயின் உறங்கிய வேழம் விழிப்பது போலும், பதுங்கிய புலி பாய்வது போலும், வளைந்தவில் தைப்பது போலும், பிந்திய கடா மோதுவது போலும், அடங்கியுள்ள மேன்மக்கள் அவர்களது அடக்கத்தை விட்டு வெளியேற நேரிடும், அக்கால் அவர்களை அடக்க முயல்வது சமுத்திர வெழிற்சிக்கு வைக்கோல் அணைகட்டுவது போலாகும். ஆதலின் தங்கள் வல்லபங்களையும் எதிரிகளின் வில்லபங்களையும் உணராது பொய்மொழிகளைப் புகட்டி வீணே பிதற்றித் திரிகின்றார்கள். இனியேனு மித்தகைய விழி மொழிகளைக் கூறாது தங்கள் மட்டில் தங்களது விழிச்செயல்களை வெளிவராது அடக்கிக் கார்த்துக் கொள்ளுவார்களாயின் அதுவே அவர்களுக்கு சிறப்பைத் தரும்.

திரிக்குறள்

அடக்கம் மமரருளுய்க்கு மடங்காமெய் / யாரிரு ளுய்த்து விடும்

விவேக சிந்தாமணி


வில்லது வளைந்திற்றென்றும் வேழமதுறங்கிற்றென்றும்
வல்லியம் பதுங்கிற்றென்றும் வளர்கடா பிந்திற்றென்றும்
புல்லர் தன் சொல்லுக்கஞ்சி பொருத்தனர் பெரியோரென்றும்,
நல்லதென் றெண்ணவேண்டாம் நஞ்செனக் கருதுவீரே.