பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 - சுந்தர சண்முகனார்

சில ஆண்டுகட்கு முன், ஆப்பிரிக்கப் பெரு நிலத்தில் உள்ள கானா என்னும் நாட்டின் தலைவனாக இருந்த என்குருமா என்பவன், சீனாவிற்குச் சென்றிருந்தபோது, கானாவில் இருந்த அவன் எதிரிகள் நாட்டைப் பிடித்துக் கொண்டு அவனை நிலையாக வெளியேற்றிவிட்ட வரலாறு உலகறிந்ததே.

இத்தகைய பின்னணியிலேயே இராமனும் அகப்பட்டு நாடு விட்டுக் காடு செல்லும்படிச் செய்யப்பட்டான் என்பது ஒருவகைக் காப்பியக் கருத்துச் சுவையாகும் பாடல்:

இரு வரத்தினில் ஒன்றினால் அரசு கொண்டு இராமன்
பெரு வனத்திடை ஏழிரு பருவங்கள் பெயர்ந்து திரிதரச் செய்தி ஒன்றினால், செழுகிலம் எல்லாம்
ஒருவழிப் படும்உன்மகற்கு, உபாயம் ஈது என்றாள்

(90)

ஓராண்டோ- ஈராண்டோ இல்லை. பதினான்கு ஆண்டுகள் இராமன் வெளியே இருந்தால், நாடு இராமனை மறந்துவிடும்; பரதனது ஆட்சி நிலைத்து விடும்- என்பது ஒருவகைப் பின்னணியாகும்.

கைகேயி சூழ்வினைப் படலம்

வாழிய

தயரதன் கைகேயிக்கு இராமனது முடி சூட்டைப் பற்றிச் சொல்ல அவள் இருக்கும் இடத்திற்கு, வாழ்க வாழ்க எனச் சிற்றரசர்கள் தன்னை வாழ்த்திக் கொண்டு பின்தொடர நள்ளிரவில் வந்தான்.

நாழிகை கங்குலின் நள் அடைந்த பின்றை
யாழிசை அஞ்சிய அம்சொல் ஏழை கோயில்
வாழிய என்று அயில்மன்னர் துன்ன வந்தான்
ஆழி நெடுங்கை மடங்கல் ஆளி அன்னான்

(5)