பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84 - சுந்தர சண்முகனார்

செல்லிய செலவினால் சிறிய திக்கு எனச் சொல்லிய சேனையைச் சுமந்ததே எனில்
ஒல்லொலி வேலை நீர் உடுத்த பாரை ஓர் மெல்லியல் என்றவர் மெலியரே கொலாம்

(36)

தமிழ்த் தலைவன்

தமிழ்த் தலைவனாகிய அகத்தியன், இந்திரனுக்கு அஞ்சிக் கடலில் ஒளிந்து கொண்ட விருத்திராசுரனை வெளிக் கொணர்வதற்காகக் கடல் நீர் முழுவதையும் குடித்தது போல், பரதனுடன் சென்றவர்கள் வழியில் உள்ள ஆற்று நீர் முழுவதையும் பருகினார்களாம். சிவனது திருமணத்தின்போது கூட்ட மிகுதியால், வண்டி குடை சாய்வது போல் வடபுலம் தாழத் தென்புலம் உயர்ந்து விட, நிலைமையைச் சரி செய்யத் தென்புலம் சென்று சமமாக இரு பகுதிகளையும் நிலை நிறுத்திய அகத்தியன் போல், படைஞர்களும் முதலிலிருந்து இறுதி வரையும் ஒரே கூட்டமாகச் சென்றதால், நிலம் சம நிலையில் இருந்ததாம். அகத்தியன் வழியில் குறுக்கிட்ட விந்திய மலையை அடக்கிக் தாழ்த்தியதுபோல், கூட்டமும் வழியி லுள்ள மலைகளைச் சுமை மிகுதியால் கீழே அழுந்தச் செய்தனவாம். பாடல்:

அலை நெடும் புனல் அறக் குடித்தலால், புவி நிலைபெற நிலைநெறி நிறுத்தலால், நெடு மலையினை மண் உற அழுத்தலால், தமிழ்த் தலைவனை நிகர்த்தது அத்தயங்கு தானையே

(44)

என்பது பாடல். இதில் அகத்தியனைத் 'தமிழ்த் தலைவன்' எனக் கம்பர் குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னம் ஓரிடத்தில், 'என்றும் உளதென் தமிழ் இயம்பி இசை கொண்டான்' என்று கூறியிருக்கும் பகுதி ஈண்டு ஒப்பு நோக்கி மகிழ்தற்கு உரியது.