பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


என்ற பேரரசன், நாளந்தா பல்கலைக் கழகத்தை வடநாட்டிலே உருவாக்கினான்.

இந்த அற்புத அறிவுக் கழகத்திற்கு காஞ்சிபுரத்திலே இருந்து சென்ற தர்மபாலர்தான், தலைமை ஆசானாக அமர்ந்து அறிவுதானம் வழங்கியதாக வரலாறு சுட்டுகின்றது.

குறிப்பாகக் கூறுவதானால், சீனநாட்டுப் பயணிகளாக இந்தியாவிற்கு வருகை தந்த யுவான் சுவாங், பாஹியான், இத்சிங் போன்றவர்கள் எழுதிய வரலாறுகள், தர்மபாலரிடம் நாளந்தாவிலே போதனை பெற்ற ஞானச் சுடர் குறிப்புகளே என்றால் மிகையாகா !

"காஞ்சிக் கடிகை" என்ற சமஸ்கிருத வேதாகமக் கல்லூரி ஒன்று, முதன் முதலாக அமைந்த மாநகரமும் காஞ்சிபுரம்தான்.

இன்றைய இந்திய அரசின் தேசியக் கொடியிலே பொறிக்கப்பட்டுள்ள அசோகச் சக்கரத்தின் அதிபதியான சாம்ராட் அசோகனின் மகள் சங்கமித்திரையும், அவள் சகோதரன் மகேந்திரனும், பெளத்தத்தைப் பரப்பிட இலங்கைத் தீவிற்குப் போகும் வழியில் காஞ்சிபுரத்திலே தங்கி அசோகனின் எண்ணங்களைப் பரப்பியதாகச் சரித்திரம் சாற்றுகின்றது.

சிலப்பதிகார மாதவியின் மகள் மணிமேகலை, காஞ்சிபுரம் வீதிகளிலே அட்சயப் பாத்திரம் ஏந்தி, ஏழை மக்கள் பசிப் பிணியைப் போக்கி, அறமுரைத்ததாகச் சாத்தனாரின் மணிமேகலைக் காப்பியம் கழறுகிறது.

அய்யன் திருவள்ளுவர் பெருமான் எழுதிய திருக்குறள் மறைக்கு பத்துப் பேர் உரை வரைந்துள்ளார்கள்.

அவற்றுள் மிகச் சிறந்த, சீரிய உரையாக இன்றும் நின்று நிலவுவது, காஞ்சிபுரம் உலகலந்தப் பெருமாள் கோயில் அர்ச்சகராகப் பணியாற்றிய பரிமேலழகர் உரைதான் என்பது அறிவுலக முடிவாக அமைந்துள்ளது.

ஏறத்தாழ ஐந்நூற்றுக்கும் மேலுள்ள திருக்கோயில்களையும், எண்ணற்ற மன்னர்களது படையெடுப்புகளின் வெற்றி தோல்விகளையும் கண்ட வரலாற்றுப் புகழ்மிக்க பெருநகரம் - இன்றைய காஞ்சிபுரம்.

137