பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20


ஆற்றல்கொண்ட பிரபு ஒருவன், வேறோர் கோட்டையிலே கொலுவீற்றிருப்பான்! பாதிரிகள் பலர்; பாபச் செயலோ அமோகம்! படை பல உண்டு, தோல்வியே அதிகம்! பசும் வயல் உண்டு. பட்டினி உலவும்! வாணிபம் நடைபெற்றது. வணிகர் கொழுக்க! வரி வாங்குவார் மன்னர், வறியவர்களிடம் மட்டும்! மது உண்டு, மாதரின் அதரம் உண்டு, அதனினும் போதை தரும் நிலை தர கீதம் உண்டு, ஏழையின் சோகக் குரலுடன் போட்டியிட்ட வண்ணம். பிரான்சு! தாமரைத் தடாகத்துக்கு எருமைபோல், மக்கள் வாழ்வுக்கு ஒரு ஆட்சிமுறை இருந்து வந்தது. இந்தப் பிரான்சில் தானே ஒரு ரிஷ்லு தோன்ற முடியும். இங்குதானே, ஆண்டியாக வேண்டியவன், அரசனை ஆட்டிப் படைக்கும் இடம் பெற முடியும்.

இத்தகைய பிரான்சுக்கு மன்னனாக வந்தமர்ந்த பதின மூன்றாம் லூயிக்கு, வயது 9! சொல்ல வேண்டுமா நிலைமையை! லூயி மன்னன், சிறு பாலகன். நிழலைக் கண்டால் பயந்தோடியும், நீரைக் கண்டால் அஞ்சியும், மலர்ச் செடி அருகே சென்றால் வண்டு கொட்டுமோ, மானைத் தொட்டால் முட்டித் தள்ளுமோ என்று திகில் கொள்ளத்தக்க மனநிலை உள்ள வயது, ஒன்பது வயதுப் பாலகன், பிரான்சின் மன்னன்! கடிவாளம் அறுந்து போய், உடலிலே முள் தைத்து, வெறி உணர்ச்சியுடன் உள்ள காட்டுக் குதிரையை அடக்கி ஓட்டிச் செல்ல ஒன்பது வயதுச் சிறுவன். மன்னன் மகன் மன்னன் தானே! வயதா முக்கியம்! முடமானாலும், குருடானாலும், சித்தம் குழம்பிப் போயிருப்பினும், சீரழிவான குணம் கொண்டோனாயினும், மன்னன் மகன் மன்னனாதல்தானே முறை! தேவகட்டளை அல்லவா அது! பண்டைப் பெருமையின் சின்னம்! எனவே, ஒன்பது வயதுப் பாலகன் ஆட்சிப் பீடத்தமர்ந்தான். அவன் பெயரால், அவன் அன்னை ஆட்சிப் பொறுப்பைப் பார்த்து வந்தார்கள். அந்த அன்னையோ!

மெடிசி குடும்பம் என்பது, பிளாரன்ஸ் நாட்டிலே கீர்த்தி வாய்ந்தது. செல்வத்தாலும் பல நாட்டுடன் மணவினை காரணமாக ஏற்பட்ட தொடர்பாலும், மெடிசி குடும்பம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/20&oldid=1549080" இலிருந்து மீள்விக்கப்பட்டது