உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19


பெற்று, பெற்ற அருளைப் பாமரருக்குந் தந்து அவர்களைப் பரமபத நாதனின் பார்வையில் கொண்டுபோய் வைக்கும் பணியில் ஈடுபடும் பாதிரிமார் வேலைக்குத்தான், தன்னைத்தானே முதலில் ஒப்படைத்து விட்டவர். கடைசி வரையில், கார்டினல் ரிஷ்லுவாகத்தான் பெயர்--சூரன், வீரன், மகாகனம் மன்னன்--என்ற விருதுகளை விரும்ப வில்லை. ஏன் விரும்ப வேண்டும், விருதுபல பெற்றவர்கள் எல்லாம் தன்முன் கட்டியம் கூறி நிற்கக் காணும்போது, விருது வேறு தேவை என்ற எண்ணமா பிறக்கும்! பிரான்சு நாட்டின், எந்தப் பெரும் பதவியையும், எடுத்து எவர் முன்பும் வீசும் ஆதிக்கம் இருந்தது கார்டினல் ரிஷ்லுவுக்கு, 'தேவப் பிரசாதத்தைத்' தந்து, மக்களின் 'ஜென்ம சாபல்ய' த்துக்காக தொழுகை நடத்தி, துதிப்பாடல்களைப் பாடி, ஏசுவின் சுவிசேஷத்தை எங்கும் பரப்பும் பணிபுரிவதற்காக என்று வாழ்க்கைப் பாதைப் பயணத்தின் துவக்கம் இருந்தது--பாதையோ, பிறகு வளைந்தது, குறுக்கே கிடைத்த மற்றோர் பாதை, அரண்மனைக்கு ரிஷ்லுவை அழைத்துச் சென்றது. மண்டலம் காலடியில் கிடந்தது.

பிரான்சு! விசித்திரமான நாடு: விபரீதமான நிலைமைகள்! அங்கு, அழகும் அவலட்சணமும், வீரமும் கோழைத் தனமும், சமரசமும் சதிச் செயலும், கலையும் கொலையும், காவியமும் கபடமும், செல்வமும் சீரழிவும், உலுத்தரின் உல்லாசமும் உழைப்போரின் பெருமூச்சும் ஒன்றோடொன்று மோதிக் கொள்ளவில்லை, ஒன்றை ஒன்று அடுத்தடுத்து இருந்து வந்தன--மேகங்கள், அங்கும் இங்கும், கருநிறமாக ஒன்றும் வெண் கருமுகிலாக மற்றொன்றும் உள்ளது போல்! ஒன்றேடொன்று மோதி, பேரிடியாக மாறியதுதான், பிரன்சுப் புரட்சி. ரிஷ்லுகாலத்துப் பிரான்சிலே, மேகங்கள் சூல் கொண்டன. அந்தப் பிரான்சில், மன்னனுடைய அட்டகாசம் சிறந்ததா, பிரபுக்களின் கோலாகலம் சிறந்ததா என்று கண்டு பிடிக்க முடியாத நிலை. அரண்மனையில் மட்டும்தான் அரசோச்சுபவர் இருப்பார் என்பது பொது நிலை. பிரான்சிலே அரண்மனையிலே மன்னர் இருப்பார்; ஆனால் அரசோச்சும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/19&oldid=1549079" இலிருந்து மீள்விக்கப்பட்டது