பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18


னான்! பிரபுக்களுக்கு, அவன் பெயர் கேட்டாலே அச்சம், பிறநாட்டு மன்னர்களோ, அவனுடைய திட்டம் இப்போது யாதோ, நாளை எங்ஙனம் உருவெடுக்குமோ என்று எண்ணித் திகைப்பர். அவன் ஆதிக்கத்தை எதிர்க்கும் ஆற்றல் எவருக்கும் ஏற்படவில்லை. முணுமுணுப்போர் மூலைக்குத் துரத்தப்படுவர்! சதிபுரிவோர், சிரம் கொய்யப்படும். புரட்சி முளைத்தால் பொசுக்கித் தள்ளப்படும். மன்னனே, உற்றார் உறவினர், உடன்பிறந்தார், பெற்றதாய், எனும் எவருக்கும் கட்டுப்படமாட்டான்; ரிஷ்லு, கீறிடும் கோட்டினை மட்டும் தாண்டமாட்டான். பற்று, பாசம், நட்பு, நன்றியறிதல், தயை தாட்சணியம், அச்சம், எனும் எதனையும் பொருட்படுத்தாமல், தான் இட்டதே சட்டமென்றாக்கி, ஈடு எதிர்ப்பு இன்றி, முடி தரித்த மன்னனையும் பிடிவாதம் நிரம்பிய பிரபுக்களையும், சதி புரிந்து புரிந்து பழக்கப்பட்டவர்களையும், ஒருசேர, அடக்கிஆண்டவன், கார்டினல் ரிஷ்லு. படைத் தலைவர்கள் அவனிடம் பணிந்தனர். பூஜ்யர்கள் அவனிடம் சரண் புகுந்தனர். பிரான்சுநாட்டு ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது முதல் இறந்துபடும் வரையில், பிரான்சிலும், அதனுடன் எவ்வகையாலேனும் தொடர்பு கொண்ட எந்த நாட்டிலும், கார்டினல் ரிஷ்லுவைப் பற்றித்தான் பேச்சு. மன்னர்கள் மாறுவர், மண்டலங்களிலே மகத்தான சம்பவங்கள் உருண்டோடும், ஆனால் எவரும் அஞ்சும் ஒரே மகத்தான சம்பவமாக, ரிஷ்லுவின் ஆதிக்கம்தான் நிலவிற்று.

பதின்மூன்றாம் லூயி மன்னன் பட்டத்துக்கு வருகிற போது, கார்டினல் ரிஷ்லு அரண்மனையில் இல்லை, ஆதிக்கத்தில் இல்லை, துவக்கம் கூட இல்லை. கார்டினல் ரிஷ்லு, இறக்கும் போது "எனக்குப் பிறகு, இதோ இந்த மாஜிரின் என் இடம் பெறட்டும்" என்று பதின்மூன்றாம் லூயி மன்னனிடம் கூறினான் -மன்னன் மறுக்கவில்லை -மறக்கவுமில்லை--மாஜிரின் ரிஷ்லுவாக்கப்பட்டான். இந்த வகையான செல்வாக்கைப் பெற்ற கார்டினல் ரிஷ்லு, 'நானுனக்கு மகன் அலனோ, நீ எனக்கு வாய்த்த தந்தை அலவோ' என்று ஆண்டவனிடம் நெஞ்சு நெக்குருக இறைஞ்சி, அருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/18&oldid=1549078" இலிருந்து மீள்விக்கப்பட்டது