பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22


வத்தை அறிந்து நடப்பதுதான். சாமான்யமான கலையா, அது! அதிலும், பிரான்சில், அந்த நாட்களில்! பெற்ற செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு கான்சினி ஆட்சி முறையிலே ஒரு விறுவிறுப்பு, ஏற்படுத்தினானா? இல்லை! பட்டமும் பதவியும் பரிசும் வாரி வழங்குவான் நண்பர்களுக்கு. மேரி அம்மைக்கு எதிராகப் பகைக்கூட்டம் கிளம்பிற்று, அதனை அறிந்து அழிக்கும் ஆற்றலுமற்றிருந்தான் கான்சினி. உரித்த பழத்தைச் சாப்பிட்டுவிட்டு உயர்தரப் பானம் பருகி, உல்லாச ஓடம் ஏறிச்செல்லும் போக்கினன், கான்சினி. அவ்னிடம், மேரிதேவி காட்டிய பரிவு, எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிற்று--மேரி அதை உணர்ந்து அஞ்சினாள். கான்சினி ஏதும் செய்ய இயலாதிருந்தான்! அரண்மனைக்குள்ளேயும் வெளியேயும், சீமான்களின் சிங்கார மாளிகைகளிலே, பிரபுக்களின் பாசறைகளிலே, கான்சினி--மேரி தொடர்புபற்றி கோபப் பேச்சுக் கிளம்பும், சூளுரைப்பர் சிலர், சிரத்தை அறுத்தெறிய வேண்டுமென்பர் சிலர். ஏன் இந்த மேரி தேவியின் புத்தி இவ்வளவு கெட்டுக்கிடக்கிறது என்பார் ஒருவர், எதற்கும் ஒரு அளவு இருக்கவேண்டாமா, என்பார் மற்றெருவர்; எதிர்ப்புப் பல இடங்களிலிருந்தும், உருவெடுத்த வண்ணம் இருந்தது.

ரிஷ்லு, அப்போதெல்லாம் பரமனுடைய நாமத்தை ஜெபித்துக்கொண்டு, தேவாலயப் பூஜாரியாய், திவ்யப் பிரபந்தங்களின் தேன்மொழியை ரசித்துக்கொண்டு, நாத்தீகர்களைத் திருத்திடும் நற்றொண்டிலும், சந்தேகிகளைச் சன்மார்க்கிகளாக்கும் பணிபுரிந்து கொண்டும், மத தத்துவ விளக்க ஏடு தீட்டிக்கொண்டும் இருந்தான்--ஆனால் உள் எண்ணமோ, உடைக்கு ஏற்றது அல்ல. தேவாலயத்திலே தான் உலவினான்; ஆனால், நோக்கமோ, அரசியல் ஆதிக்கம் பெறவேண்டும், எப்படியேனும், பாரிஸ் பட்டணம் சென்று, புகழ்க்கொடியை நிலைநாட்டவேண்டும் என்பது தான். உடைகாவி, உள்ளமோ பதவி மோகத்தில், நாளை, மறுநாள், அடுத்த திங்கள், இன்னும் சில திங்களில் என்று, இவ்வண்ணம் ஆவலுடன் எதிர்பார்த்தபடி இருந்தான், அழைப்பு வரும் வரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/22&oldid=1549082" இலிருந்து மீள்விக்கப்பட்டது