பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23


என்று. அருளாலயத்துக்கு அனைவரும் வாரீர், அவன் புகழ் கேளீர் என்று பக்தர்களை அழைக்கவேண்டிய ரிஷ்லு, பாரிஸ் பட்டணத்திலிருந்து, ஆட்சியாளர்களிடமிருந்து, தனக்கு நமது அழைப்புவரும் நாளே திருநாள், பெருநாள் என்றெண்ணிக் கிடந்தான். அந்த அழைப்புக் கிடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தான். நமது தேவாலய அதிபர், நமக்காகத் திருப்புகழைத் தொகுத்துத் தருவார், ஐயன் குணங்களை அழகுபட எடுத்துரைப்பார், பாவத்தைத் துடைக்கும் பணியினைப் பக்குவப்படுத்துவார், என்றுதான், அந்த ஊர் மக்கள் எண்ணிக்கொண்டனர். ஆனால், லூகான் நகரதேவாலய அதிபராக இருந்துவந்த ரிஷ்லு, மேரி அம்மையிடமிருந்து அழைப்புவரவேண்டுமென்று எதிர்பார்த்தவண்ணம் இருந்தார். உள்ளே புக இடம் கிடைத்துவிட்டால் போதும், பிறகு உயர்வைத் தடுக்க யாராலும் முடியாது என்று நம்பிக்கை பலமாகக் கொண்டான். ரிஷ்லு. பிரான்சு நாட்டு நிலையும், ஆளும் அம்மையின் நிலையும், ஆட்டிப் படைக்கும் கான்சினியின் குணமும், பிரபுக்களின் வலிமையும், திகைத்துக் கிடக்கும் மக்களின் குமுறலும், ரிஷ்லுவுக்குத் தெளிவாகத் தெரியும். ஜெபமாலைதான் கரத்தில். ஆனால், நினைப்பு முழுவதும், நாதன்மீதல்ல, நாடாள்வோர்மீது, ஆட்சிபீடத்தருகே செல்லும் பாதையின்மீது. தேவாலய அதிபருக்குவேண்டிய அறிவாற்றல் இல்லையோ-நிரம்ப-நிரம்ப தத்துவம் தெரியும், தர்க்கம் அறிவார்; ஏடு தீட்டினார், வாதம் புரிந்தார் - ஆனால் திருப்தி இல்லை; இதுதானா, இவ்வளவு தானா, பிரான்சு நாட்டை அல்லவா ஆளவேண்டும், மந்தையிலிருந்து விலகிவிட்ட ஆடுகளைத் திருப்பிக்கொண்டுவந்து சேர்க்கும் வேலைதானா எனக்கு? நான் ஆளப் பிறந்தவன், ஆளும் ஆற்றல் படைத்தவன், கான்சினியின் கரத்திலே பம்பரமாக உள்ள பிரான்சுமட்டும், என் கரத்திலே ஒப்படைக்கப் பட்டால்......! எண்ணும்போதே எதிர்காலக் காட்சிகள் மனதிலே தோன்றின. அழைப்போ, வந்தபாடில்லை. ரிஷ்லுவின் அண்ணன் ஹென்ரி ரிஷ்லு, பாரிசில், மேரி அம்மையின் கருணைக்குப் பாத்திரமானவனாகத்தான் இருந்தான். தம்பியின் உருக்கமான வேண்டுகோள் கிடைத்தது. சமயம்வரவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/23&oldid=1549007" இலிருந்து மீள்விக்கப்பட்டது