பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25


முடியாத நிலை. குன்றிக் கிடப்பான். உடல்தான் அவ்விதம். உள்ளமோ சுறுசுறுப்பானது - இளமை முதலே! பிரான்சு நாட்டு நிலை, பொருளாதார நெருக்கடி, கத்தோலிக்கருக்கும் பிராடெஸ்ட்டெண்ட் பிரிவினருக்கும் ஏற்படும் போராட்டங்கள், அரச குடும்ப அலங்கோல நடவடிக்கைகள், இவைபற்றி எல்லாம் ஊரார் பேசிக்கொள்வர், சிறுவன் கூர்ந்து கவனித்துக் கேட்பான். மனதிலே, எண்ணங்கள் தெளிவாகப் பதியலாயின சிறு வயது முதல் இறந்துபடும் வரையில், ரிஷ்லு, சதா நோயுடன் போராடிக்கொண்டுதான் இருக்கநேரிட்டது. எனினும் ஓயாத உழைப்புக்குத் தன்னை உட்படுத்திக்கொண்டான். பள்ளியிலே முதல் மாணவனாக, ஆசிரியர் பாராட்டும் திறம்படைத்தவனாக விளங்கவேண்டும் என்று ஆசை. படிப்பதிலே ஆர்வம். எந்தத் துறை சம்பந்தமான ஏடானாலும், அதனைத் தெளிவாகக் கற்றுணருவதிலே கவலை. ஆசிரியர்கள் ரிஷ்லுவின் அறிவுத் தெளிவு கண்டு ஆச்சரியப்பட்டனர். எப்போதும் நோய்வாய்ப்பட்டு, மெலிந்து சோர்ந்து காணப்பட்ட இந்த வாலிபனுக்கு அறிவுக் கூர்மை எப்படி ஒளிவிடுகிறது காணீர், என்று பலரும் பாராட்டுவர்-ரிஷ்லுவுக்கு இதனைக் கேட்பதிலே மிக்க மகிழ்ச்சி. துவக்க முதலே ரிஷ்லுவிடம் இந்தக் குணம் இருந்து வந்தது - தனக்கு ஈடு எதிர்ப்பு எவரும் இருத்தலாகாது, என்ற எண்ணம், அதிகாரத்தில் அமர்ந்ததும், இதே எண்ணம்தான், ரிஷ்லுவை, ஈவு இரக்கமற்ற செயல்களையும் செய்யத் தூண்டிற்று. இலக்கியத்துறைப் படிப்பை முடித்துக்கொண்டு, ரிஷ்லு, ராணுவக் கல்லூரியில் சேர்ந்தான். குதிரை ஏற்றம், வாட்போர், ஆகிய கலைகளை நேர்த்தியான முறையிலே பயிற்றுவிக்கும், உயர்தரக் கல்லூரியில் ரிஷ்லுவுக்கு இடம் கிடைத்தது. இலக்கியக் கல்வி பயில்கையில் எத்தகைய திறமையும் ஆர்வமும் காட்டினானோ, அதேபோலவே, ராணுவத் துறைப் படிப்பிலேயும் ரிஷ்லு திறமையைக் காட்டி ஆசிரியர்களின் பாராட்டுதலைப் பெற்றான்.

இலக்கியம் பயின்றான், ஆனால் இலக்கிய ஆசிரியனாகவில்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/25&oldid=1549008" இலிருந்து மீள்விக்கப்பட்டது