பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26


போர்க்கலை பயின்றான்; ஆனால் படையிலே தளபதியாகவில்லை.

இவைகளை எல்லாம் ஆர்வத்துடனும் திறமை நிரம்பும் முறையிலும் கற்றானே யொழிய, ரிஷ்லு, இந்தத் துறைகள் தரும் இடமும் வாய்ப்பும் போதுமானவை என்று திருப்தி அடையவில்லை. வேறு ஓர் இடம் தனக்கு வேண்டும், இவைகள் யாவும், வெறும் 'முதற்படிகளே' என்று எண்ணினான். ஆனால் அவன் இலக்கிய அறிவைக் கண்டவர், அவன் பெரிய இலக்கிய கர்த்தாவாகிவிடுவான் என்று எண்ணிக்கொள்வர்--ராணுவக் கல்லூரியிலே அவனைக் கண்டவர்களோ, இவன் படையில் சிறந்த தளபதியாகத் திகழ்வான் என்று எண்ணிக் கொள்வர். ரிஷ்லுவோ, இலக்கிய அறிவும், ராணுவக்கலை அறிவும், தனக்குக் கிடைக்க இருக்கும் பெரியதோர் வாய்ப்புக்குத் துணைபுரியும், என்று மட்டுமே எண்ணிக்கொண்டான். சிறுவயது முதற்கொண்டே ரிஷ்லுவின் மனம் அப்படிப்பட்டதாக இருந்தது. வேறு யாருக்கும் கிட்டாத கிடைக்காத இடம் தனக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுவான்-அதற்கான முழுப் பயிற்சியும் பெற்றாக வேண்டும், என்ற ஆர்வம், நோயையும் பொருட்படுத்தாமல், உழைக்கச்செய்தது. இவன் 'தாங்குவானா' இவ்வளவு கடுமையான உழைப்பை என்று தாயார் கவலைப்படுவார்கள்--ரிஷ்லுவோ, கனி பறிக்கச் செல்பவன் மரத்தின்மீது ஏறிவிட்டால், கால்கடுக்குமே என்றா எண்ணுவது, இடையில் கிடைக்கும் செங்காய் கொண்டா திருப்தி அடைவது? மேலே மேலே ஏறத்தான் வேண்டும், கனி கரத்தில்படும் வரையில். என்ற முறையிலே உழைத்து வந்தான்.

இலக்கியம் தீட்டுவான் என்று எதிர்பார்த்தவர்களை ஏமாற்றிவிட்டு, இராணுவக் கல்லூரி சென்றான்; தளபதியாவான் என்று எதிர்பார்த்தனர்; ஆனால், ரிஷ்லுவோ, சாமியார் ஆனான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/26&oldid=1549009" இலிருந்து மீள்விக்கப்பட்டது