பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37


"என் பரம்பரையை இழிவாகப் பேசினாயா? நாளைக் காலை 8 மணிக்கு, வாட்போர். தயார்--திராட்சைத் தோட்டத்தருகே--8 மணி" என்று அறைகூவல் கிளம்பும், இரு பிரபுக்கள் வாட்போரிடுவர், ஒரு தலை உருளும், மற்றொரு மண்டை கனம் கொள்ளும்! பிரபுக்களின் பொதுநிலை இது. ஒரு சில பிரபுக்கள், அரசியல் அதிகாரம் தேடுவர்--திறமை இருப்பதால் அல்ல ஆசை பிறப்பதால்! கிடைக்காவிட்டால், கலகம், குழப்பம்! இப்படிப்பட்ட பிரபுக்களிடையே, மேரி சிக்கிக் கொள்ள நேரிட்டது.

இத்தாலி நாட்டு கான்சினியும் மேரியும் அவர்களின் ஆதரவாளர்களும் ஒருபுறம்.

காண்டி எனும் பிரபுவும் அவனை ஆதரிக்கும் சீமான்களும் மற்றோர்புறம்.

காண்டி சீமானுக்கு, எவ்வளவு சலுகை காட்டினாலும் திருப்தி கிடையாது--கான்சினி தொலையவேண்டும், மேரி அம்மைக்குத் துணைபுரியும் வாய்ப்புத் தனக்கே அளிக்கப்பட வேண்டும், என்பது காண்டியின் கட்டளை! மரியாதைக்காக வேண்டுகோள் என்றனர். காண்டி, கட்டளைதான் பிறப்பித்தான்.

குழப்பம் வலுத்தது--எனவே பேரவை கூட்டப்பட்டது.

பேரவை கூடுவது பெரிய திருவிழாவாயிற்று. எல்லாச் சிக்கல்களும் தொல்லைகளும் தீர்ந்துவிடும் என்பது, பாமர மக்களின் எண்ணம். எனவே அவர்கள் பேரவை கூடுவதை வரவேற்றனர்! மதத்துறையினருக்கும் மகிழ்ச்சி, தமது உரிமைகளை வலியுறுத்தவும் தமது ஆலோசனைகளை அரசினர் கேட்பதுதான் அறமுறை என்று எடுத்துரைக்கவும் வாய்ப்பு, என்ற எண்ணத்தால். பிரபுக்களுக்குப் பூரிப்பு, தமது அந்தஸ்தையும் அதிகாரத்தையும் அரசாளும் அம்மை அறிய இது பொன்னான வாய்ப்பு என்று. மக்கள் மன்றத்தினருக்கும் நம்பிக்கை, தங்கள் நலன் பற்றி நல்லவர்களெல்லாம் கூடிக் கலந்து பேசி, திட்டம் தீட்டுவர் என்று. ரிஷ்லுவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி, நுழைய இடம் கிடைத்தது என்று, பேர-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/37&oldid=1549019" இலிருந்து மீள்விக்கப்பட்டது