பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

தானே, எனவே மக்கள் அனைவருக்கும்தானே அரசியல் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும், என்ற தத்துவப் பேச்சு மட்டுமல்ல, மக்களாட்சியை மலரச்செய்தது! பிரபுக்களின் அக்ரமம், புரட்சியை மூட்டிற்று, புரட்சித் தீயிலிருந்து மக்களாட்சி மலர்ந்தது! அந்த முறையின்படி, பிரான்சின் பிரபுக்கள், உலகுக்கு ஜனநாயகத்தை வழங்கியவர்களாவர்.

1,40,000 பிரபுக்கள் இருந்தனர், பிரான்சில்! எல்லோரும் செல்வச் சீமான்களல்ல, பலர் ஆடி அழிந்ததால் கடன்பட்டுச் சொத்தை இழந்துவிட்டு, விருது மட்டும் வைத்துக்கொண்டு வெட்டிகளாகத் திரிந்தனர். இருபது முப்பது குடும்பம், செல்வமும் செல்வாக்கும் நிரம்பப் பெற்று, அரசு செலுத்துபவரும் அச்சம் கொள்ளத்தக்க ஆர்ப்பரிப்புடன் இருந்து வந்தது. அவர்களுக்குத் தனிக் கோட்டைகள், கொடி மரங்கள், படைகள், பாசறைகள்--ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொள்வர், அரசனால் தடுக்கமுடியாது, அரசனையே எதிர்ப்பர், அரசன் அவர்களை அடியோடு அழிக்க முடியாது. அவர்களுக்குத் தனி விசாரணை மன்றங்கள்! தனிச் சட்ட திட்டங்கள்! அரசுக்குள் ஓர் அரசு! பாரிசில் ஒரு பட்டத்தரசன் என்றால், பிரான்சிலே பகுதிக்குப்பகுதி, பட்டத்தரசர்களைவிடக் கொட்ட மடித்துக் கொண்டு பிரபுக்கள் வேறு கோலோச்சி வந்தனர். வரி செலுத்தமாட்டார்கள், அரசனுக்கு தமது 'பிரஜைகளிடம்' வரிவசூலிப்பார்கள் கண்டிப்புடன். மன்னன், சலுகைகள் காட்டுகிறவரையில் சல்லாபம் செய்வர், சலுகை குறைந்தால், சதியோ, சமரோ கிளம்பும்! அரச விருந்துகளிலே முதலிடம்! கேளிக்கைக் கூடங்களுக்கு அழைப்பு! உல்லாசப் பயணத்துக்கு வருவர்! நாட்டுக்குப் பேராபத்து எனில், வரிந்து கட்டிக் கொண்டு எதிரியைத் தாக்குவரோ? இஷ்டமிருந்தால்! எதற்கும் கட்டுப்படமாட்டார்கள்! ஒருசில கண்வெட்டுக்காரிகளுக்கு மட்டுமே கட்டுப்படுவர்!! உட்பகை நெளியும்! ஒரு மாளிகை பற்றி மற்றோர் மாளிகையிலே வம்புப் பேச்சுத் தாராளமாக நடைபெறும். அவள், எனக்கா, உனக்கா? என்று அமளிகிளம்பும், சிறை எடுத்தல், சிரம் அறுத்தல், இவை அன்றாட நடவடிக்கைகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/36&oldid=1549018" இலிருந்து மீள்விக்கப்பட்டது