பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

வாரம் இருந்தது- கணவன் காதலிக்கவில்லை--கல்லுருவிலும் இல்லை, காமாந்தகாரனாகவுமில்லை, தடிதாங்கியவனுமல்ல, இளைஞன், ஒத்த வயதினன், எனினும் அவன் தன்னை நாடுவதில்லை, காதல் ஒளி அவன் கண்களிலே தெரிவதில்லை, தனி அறையில் தோழன் லைனிசுடன், என்ன மர்மப்பேச்சோ, என்ன இன்பப்பேச்சோ, மணிக்கணக்கில் பேசுகிறான். மலர் இங்கே வாடுகிறது, மணம் மாய்கிறது, அவன் அங்கே நள்ளிரவு நேரத்திலும் நண்பனுடன் பேசிக் களிக்கிறான்! என் செய்வாள் ஆன், ஏங்கினாள்! அழுதாள்.

காண்டி பிரபுவின் பகையைப் போக்கிச் சமரசம் உண்டாக்க, மேரி, ரிஷ்லுவை அனுப்பிவைத்தாள். ரிஷ்லுதான், முன்பே காண்டி பிரபுவுக்கு அன்பு ததும்பும் கடிதம் அனுப்பினவனாயிற்றே--எனவே, காண்டியிடம், பேசிச் சரிப்படுத்திவிட முடிந்தது. தனக்குச் சேவை செய்வதையே கொள்கையாகக் கொண்டவன் இந்த ரிஷ்லு, எனவே இவன் பேசுவதை நம்பலாம், என்று எண்ணினான். ரிஷ்லுவும், "எதிர் காலம்' சிறப்புடன் விளங்கும்! தங்களின் ஆற்றலை எதிர்த்து நிற்க வல்லவர் யார்? மேரி என்ன இருந்தாலும் பெண்! கான்சினியோ, களியாட்டத்தில் மூழ்கிக் கிடப்பவன்! மன்னனோ, விளையாட்டுச் சிறுவன்?" என்று பலப்பல கூறி மயக்கக் கூடியவன்தானே! என்ன நோக்கம்? காண்டி பிரபுவுக்கு அதிகாரம் கிடைக்கவேண்டும் என்பதா! செச்சே! அதற்கா இவ்வளவு பாடு! மேரி அம்மை உணரவேண்டும், நீண்ட நாள்பகையை, பிடிவாதத்தை, முரட்டுத்தனத்தை எவ்வளவு திறம்பட ரிஷ்லு முறித்துவிட்டான், இவனன்றோ இனி நமக்குத் துணையாக இருக்கவேண்டும். இவனிருக்க நாம் கான்சினியை நம்பிக் கிடக்கிறோமே, என்றெல்லாம் எண்ணிக் கொள்ள வேண்டும்! இதற்காகவே ரிஷ்லு, சமரசம் ஏற்படுத்திவைத்தான்--கபடம் அறியாத காண்டிபிரபு, பாரிஸ் வந்தான், அரண்மனை நுழைந்தான், அடையவேண்டிய பெரும் பேறு கிடைத்துவிட்டது என்று எண்ணிக் களிப்புற்றான்.

காண்டியின் கோலாகலம் வேகமாகத் துவங்கி, வெறிபோல் வளர்ந்தது. யாரையும் சட்டை செய்யாத போக்கு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/47&oldid=1549029" இலிருந்து மீள்விக்கப்பட்டது