பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58


தாக வாக்களித்து. எபர்னான் சென்று, மேரியிடம் பேசி போரை நிறுத்தி வைத்ததுடன் சமரச ஏற்பாட்டையும் தயாரித்துத் தந்தான்!

ஒருபுறம் மன்னன், அவனுடன் கீழே சாயப்போகும் லைனிஸ்.

மற்றோர்புறம் சூழ்ச்சித் திறமும் ஆதிக்க ஆசையும் மிகுந்த மேரி--அம்மையைச் சுற்றி அதிகாரப் போதையைப் பருகி அட்டகாசம் செய்ய வல்ல பிரபுக்கள்.

இந்த இருதரப்பிலே, மேரி தரப்பினுடைய கரம் வலுத்தால், தன் ஆதிக்க நோக்கம் ஈடேறும் வழி அடியோடு அடைபட்டுவிடும், எனவே, மேரியின் திட்டம் வெற்றிபெறக் கூடாது--வெற்றிபெற விடக்கூடாது.

மன்னன்? பரவாயில்லை ! கரத்தில் சிக்குவான்! லைனிஸ்? அசடன்! ஆடி அழிவான்!!--எனவே மன்னர். தரப்புக்கே துணைநிற்க வேண்டும், என்று ரிஷ்லு தீர்மானித்தான்.

ரிஷ்லுவின் பேச்சுக்கு மேரி, ஏன் இணங்க வேண்டும்? மேரி, அடைந்திருந்த அவமானம் சாமான்யமானதல்ல. வேட்டைக்கார வெறியன், அரண்மனையை விட்டே துரத்தினான். கீறிய கோடு தாண்டாதிருந்த மன்னனை, மகனை, பிரித்து வைத்தான், பகை மூட்டி விட்டான். எபர்னான் பிரபுவின் ஆற்றல் துணை நிற்கிறது--வெற்றி எளிது!--இது மேரிக்குப் புரியக் கூடியதுதானே! ஏன் ரிஷ்லுவின் சமரசப் பேச்சுக்கு, இணங்க நேரிட்டது?

ரிஷ்லு, தர்பார் தளுக்கனல்ல! பாவையரை மயக்கும் பாகு மொழி பேசியும், சொக்க வைக்கும் புன்சிரிப்புக் காட்டியும், கீதமிசைத்தும் நடனமாடியும், களிப்பூட்டியும், காதலைப் பொழிந்தும், காரிகையரைக் கொல்லும் உல்லாசக் கல்லூரியில் தேறியவனுமல்ல! நோயாளி! பகட்டுடை அணிந்து பரிமளம் பூசிக்கொண்டு மினுக்கும் பட்டுப் பூச்சியுமல்ல!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/58&oldid=1549040" இலிருந்து மீள்விக்கப்பட்டது