பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71


தற்குக் காரணம், லாரோகேல் கோட்டையினருக்குத் துணை புரிய வந்த ஆங்கிலக் கப்பற்படைக்குத் தலைமை தாங்கி, பக்கிங்காம் பிரபு வந்தது! அதற்குக் காரணம், ஒரு அரண்மனைச் சம்பவம்!

ஒயில்மிக்கவன், பக்கிங்காம் பிரபு! ஆங்கிலநாட்டுச் சீமான், அரசனுடைய ஆதரவு நிரம்பப் பெற்றவன். அழகு கண்டால், ரசிகனாகிவிடுவான்--ரசிகனானதும், ரசாபாசம் நேரிடும்! களியாட்டத்தில் விருப்பமுடையவன். கண்டதும் காதல் கொள்பவன் மட்டுமல்ல, எந்தக் கட்டழகியும், தன்கண் தொட்டால் பணிந்துவிடுவாள் என்பதிலே அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன். அலங்காரமான உடை, ஆளை மயக்கும் பேச்சு, அளவற்ற துணிச்சல்.

லூயி மன்னனுடைய உடன் பிறந்தாள், ஹெனிரிட்டா, இங்கிலாந்து மன்னன் சார்லசுக்கு மனைவியானாள்.

ஹெனிரிட்டாவை, இங்கிலாந்து அழைத்துச் செல்லும் உயர்தனிக் கௌரவம், பக்கிங்காம் பிரபுவுக்குத் தரப்பட்டிருந்தது. பாரிஸ் வந்தான், அரண்மனையில் தங்கினான், மாடப்புறாவைக் கண்டான், மையல் கொண்டான். நிராகரிக்கப்பட்ட அழகி, நிம்மதியற்ற நங்கை, ஆன், அவன் கண்ணில் தட்டுப்பட்டுவிட்டாள்! போதாதா!! மன்னனோ அவளிடம் முகங்கொடுத்துப் பேசுவதில்லை, மங்கையோ வாடா மல்லிகை என மணம் வீச இருக்கிறாள். ஆரத்தழுவும் உரிமை கொண்டோன் அலட்சியப் படுத்திவிட்டான், ஆரணங்கு படரும் கொழுகொம்பற்ற கொடியெனத் துவள்கிறாள். கண்களிலே ஏக்கம் இருப்பதும், கவர்ச்சியை அதிகப்படுத்துவ தாகவே இருக்கிறது. பக்கிங்காம், தீர்மானித்து விட்டான், ஆன் அரசியை இன்பபுரி அழைத்துச் செல்வது என்று.


பச்சை மயில் பாங்குடன் உலவுகிறது--பார்த்து ரசிக்கும், நிலையிலும் மன்னன் இல்லை! வலைவீசத்துணிந்து விட்டான், பக்கிங்காம்.

தனியே ஒரு நாள், ஆன், அரண்மனைத் தோட்டத்திலே உலவிக்கொண்டிருந்தாள்--உல்லாச புருஷன் அங்கு சென்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/71&oldid=1549054" இலிருந்து மீள்விக்கப்பட்டது