72
றான்--காதலைப் பொழிந்தான் பார்வையால், திடுக்கிட்ட மங்கையை நெருங்கினான், கரம்பற்றினான், இன்ப அணைப்பு; அவளுக்கு இதயத் துடிப்பு, எதிர்பாராச் சம்பவம், எனவே இளமங்கை, அலறிவிட்டாள்--தன்னை விடுவித்துக் கொண்டபடி. ஆன் அலறிய குரல் கேட்டு அணங்குகள் ஓடிவந்தனர்.
“ அரசியாரே! அலறினீர்களா”
"யார்? நானா! அலறினேனா!”
“குரல் கேட்டதே!”
“ஆமாம்--செல்வோம்”
எப்படிச் சொல்வாள் நடந்ததை--சாகசக் கள்ளன் சமயம் சரியில்லை, பழம் நழுவிவிட்டது, என்று எண்ணிச் சென்றான்.
நாட்டுக்கு அரசி! நாயகன் இளைஞன்! அரண்மனைத் தோட்டம்! அயல் நாட்டான்!--என்ன அக்ரமம்--இவ்வளவு துணிவு! என்கதி இதுதானா?- என்று ஆன் எண்ணாமலிருக்க முடியுமா. தனி அறைக்குள். மன அதிர்ச்சி குறையுமா! பயம்--பயத்தின் ஊடே கோபம்--இந்த இரு உணர்ச்சிகள் மட்டுந்தானா, இவைகளை விரட்டிய வண்ணம், ஆவல்!
எவ்வளவு துணிவு! என்ன அக்ரமம்.... என்று குமுறிய நெஞ்சம், மெள்ள மெள்ள, எவ்வளவு ஆவல்! என்னகாதல்!! என்று எண்ணலாயிற்று.
தலைபோகும் காரியமாயிற்றே, என்பது தெரியாதா--தகாத காரியம் என்பதும் தெரியாதா--தெரிந்தும், என் அவன் என்னைக் கரம்பிடித்திழுத்தான்! அவ்வளவு காதல்!! துணிந்து செய்தான்! அணைத்துக் கொண்டானே, என்னை--நான் விடுவித்துக்கொள்ளாதிருந்தால்?..... செச்சே! கெட்டவன், போக்கிரி, எதுவும் செய்வான் அவன். ஆமாம்! காதலால் தாக்கப்பட்டவர்களுக்குத் தான் கண் தெரியா தாமே!... அவன் அணைத்துக் கொண்டபோது என் உள்ளம் எவ்வளவு பதறிற்று--உடல் மட்டும் ஏனோ பதறவில்லை--