உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80


சின்க்-மார்ஸ், மன்னனுடன் உல்லாசமாகப் பயணம் செய்து கொண்டிருக்கிறான். ரிஷ்லுவின் ஆள். மன்னனைத் தனியே கண்டு, ரிஷ்லுதந்த கடிதத்தைக் கொடுத்தான்--மறுகணம், சின்க்-மார்ஸ் அவன் 'சகாக்களுடன்' கைது செய்யப்படுவதற்கு, மன்னன் உத்தரவு பிறப்பித்தான்.

ஸ்பெயின் நாட்டுடன் கூடிக்கொண்டு பிரான்சுக்குத் துரோகம் செய்ய, சின்க்=மார்சும் அவன் துணைவர்களும் திட்டமிட்டனர் என்பதை விளக்கும், கடிதம் ரிஷலுவால் மன்னனுக்கு அனுப்பப்பட்டது. சின்க்-மார்ஸ் கட்டிய மனக்கோட்டை தூள்தூளாயிற்று.

சின்க்-மார்சும் அவன் துணைவர்களும் தூக்கிலிடப் பட்டனர். ரிஷ்லுவுக்கு இதற்குமேல் ஆதிக்கம் செலுத்த உடல் இடம் தரவில்லை. எப்போதும் உடலைத் துளைத்துக்கொண்டிருந்த நோய், இப்போது உடலை அழுகவே செய்துவிட்டது. பிழைப்பது முடியாத காரியம் என்பது விளங்கிவிட்டது. நார்போன் எனும் நகர் சென்று, ரிஷ்லு, 'உயில்' எழுதிவைத்துவிட்டான், மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

ஏறக்குறைய எல்லா ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டது என்ற திருப்தி இருந்தது ரிஷ்லுவுக்கு.

நெடுநாட்களாக ரிஷ்லுவுக்கு இருந்து வந்த பயம், லூயி மன்னனுக்கு குழந்தையே பிறக்காததால், மன்னனுக்குப் பிறகு, காஸ்டன் என்னும் இளவல் மன்னனாவானே, என்பது. இந்தப் பயம், ஒழிந்துவிட்டது. நீண்ட காலமாக ஒதுக்கி வைத்திருந்து ஆன் அரசியிடம், மன்னன் எப்படியோ சமாதானமானான். 1638-ல், ஒரு ஆண்மகவு பிறந்தது. அந்தச் 'சேதியை' முதலில் வந்து சொன்னவருக்கு, ரிஷ்லு வைரத்தால் செய்யப்பட்ட ரோஜாமலர் ஒன்று பரிசு தந்தானாம்.

மரணப் படுக்கையிலே ரிஷ்லு--மனக்கண்முன் என்ன தெரிகிறது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/80&oldid=1549063" இலிருந்து மீள்விக்கப்பட்டது