87
அரசுக்காக! பிரான்சுக்காக! என்ற சொற்களைத் திறம்படப் பயன்படுத்தி, கொடுமைகளைக் கூசாமல் செய்து, ஆதிக்க வெறியனாய் வாழ்ந்து, பெரும் செல்வத்தைச் சேகரித்துக்கொண்ட ரிஷ்லுவின், வாழ்க்கை முறையை, ஆதிக்கத்தைத் தேடி அலைபவர்கள் திருவாசகமென்று இன்றும் எண்ணுகின்றனர்.
ஓயாத உழைப்பு, கூர்மையான புத்தி, அளவற்ற ஆற்றல் எந்தத் துறையிலும் இணையற்ற சமர்த்து என்று பாராட்டுகின்றனர்.
உலகம், போட்டிப் பந்தய மேடை அல்ல-கூட்டுறவுச் சாலை, என்ற புனிதக் கோட்பாட்டை மதியாதார், இரும்புக் கரத்தினரை, ஈவு இரக்கமற்ற நெஞ்சினரை, அவர்களின் வெற்றிகண்டு, பாராட்டுவது, வாடிக்கையாகிவிட்டது.
மனிதனைச் சிங்கம் பிய்த்து எறிந்ததை, திராட்சைக் கொத்தைத் தின்றபடி இரசித்திடவில்லையா, ரோம் நாட்டு மமதையாளர்கள். பொது நோக்கு, பொது நலம், மக்கள் முன்னேற்றம் எனும் எதற்கும் பற்றுக் கொள்ளாது, சிறக்க வாழ வேண்டும், ஈடு எதிர்ப்பின்றி ஆட்சி செலுத்த வேண்டும், என்று முயன்று வெற்றிபெறுபவர்களைப் பாராட்டுவது, அது போன்றதேயாகும். மதத்துறைத் தலைவர்கள் உண்டு, அரசியல் துறைத் தலைவர்கள் இருக்கிறார்கள்--கார்டினல் ரிஷ்லு, மதத் துறையில் தலைமை பெறப் பணியாற்றியபடி இருந்து கொண்டே, அரசியல் துறையில் ஆதிக்கம் பெற்ற, ஒரு அபூர்வமான சர்வாதிகாரி.
பார்லிமெண்டுகளைப் பஜனை மடங்களாக்குவோர் உண்டு, பஜனை மடங்களில் பார்லிமெண்டு நடத்துவோர் உண்டு, இந்த ரிஷ்லு, பஜனை மடத்திலிருந்தபடியே பார்லிமெண்டுக்குத் தன்னைத் தயாரித்துக்கொண்டிருக்கும் தனி வழி கண்டறிந்து பயன் கண்டவன்.
மதத் துறையில் ஈடுபட்டு அதிலே மாசுகளைக் களைந்தெறிந்து, மாண்புகளைப் பெருகச்செய்து, அத்தகைய மார்க்கத்தின் மூலம் மக்கட் சமுதாயத்துக்கு உயர்வும் உய்யும் வழி-