பக்கம்:அரசியர் மூவர்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102 ☐ அரசியர் மூவர்


 மனத்திற்குப் பெரிதும் அதிர்ச்சியைத் தரும் செய்தியைக் கேட்டால் உடனே அது முற்றிலும் விளங்குவதில்லை. சிறிது நேரம் சென்ற பிறகுதான் செய்தியின் கருத்து நன்கு விளங்கும். இந்த இடைப்பட்ட நேரத்தில் ஒரு வகை அமைதி குடி கொண்டிருக்கும். அத்தகைய அமைதியிலேதான் இப்பொழுது கோசலை இருக்கிறாள். இரண்டாம் பாடலின் பின் இரண்டு அடிகள், அவள் வாழ்வையும் உயிரையும் குலைக்கப் போகிற நிகழ்ச்சியைக் கூறுபவை. என்றாலும், பண்பாட்டின் முடி என விளங்கும் இராமன் எவ்வளவு அந்நிகழ்ச்சியின் கொடுமையைக் குறைக்க முடியுமோ, அவ்வளவு குறைக்கிறான். வனம் புகுந்து வாழ வேண்டிய கால எல்லை இன்றியமையாதததாகலின், அந்த அளவைக் குறைப்பதுபோலக் கூறுகிறான். பதினான்கு ஆண்டுகள் என்று கூறி அவள் மனத்தை அதிர அடிக்காமல் “ஏழினொடேழு" என்று கூறுவது கோசலையினது தாயுள்ளத்தின் மென்மை கருதியே. ‘புண்ணிய நதிகளாடி வரப் போகிறேன்,' என்று காடு சென்று வருவதற்கு இராமன் கூறிய காரணமும் இது கருதியேயாகும்.

தசரதனின் நிலை

இச்சொற்கள் காதிற்பட்டவுடன் அத்தாய் “ஏங்கினாள், இளைத்தாள், திகைத்தாள், மனம் வீங்கினாள், விம்பினாள், விழுந்தாள்,” (1613) என்று கூறப்பெறுகிறது. உள்ளே அடைக்கும் இவ்வுணர்ச்சி வெளிப்பட்ட பின் அவள் பேசுகிறாள்.

"வஞ்ச மோமக னே!உனை மாநிலம்
தஞ்ச மாகநீ தாங்குஎன்ற வாசகம்?
நஞ்ச மோ?இனி நானுயிர் வாழ்வெனோ?
அஞ்சும் அஞ்சும்என் ஆருயிர் அஞ்சுமால்!”
(நகர் 1614)


இம்முறை வாய் திறந்தவுடன் கோசலை தசரதனைப் பற்றித் தான் நினைக்கிறாள். அவள் தன் கணவனைப் பற்றி இதுவரை நினைக்கவும் துணியாதவற்றை இப்பொழுது வாயாற் கூறுகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/104&oldid=1496901" இலிருந்து மீள்விக்கப்பட்டது