பக்கம்:அரசியர் மூவர்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளைய மென்கொடி ☐ 139



இராமனைத் தமையன் என்றே கருதிவந்தான். ஆனால், இனி அது கூடாதென்று அறிவிப்பாள் போல,'இராமன் அம்மன்னவன்,' என்று குறிப்பிட்டாள். மன்னவன் ஏவல் ஏற்று நடப்பதே குடியின் கடமையும் இயல்புமாகும். அவ்வாணையை ஏன் என்று கேட்கவோ, அதன் நலந் தீங்குகளை ஆராயவோ குடிகட்கு உரிமை இல்லை. அதேபோல, இனி இராமன் கட்டளையைத் தலைமேல் தாங்கி நடப்பதே இலக்குவனுக்குக் கடமையாகும் என்பதைக் குறிப்பிட விரும்பிய அத் தாய், இராமனை 'மன்னவன்' என்று குறிப்பிட்டாள். மன்னன் பதவியை அப்பொழுது தான் துறந்துவிட்டு வந்த மகனை 'அம் மன்னவன்' என்று கமித்திரை குறிக்கும்பொழுது அவளது மனத்திட்பத்தை நாம் வியவாமல் இருத்தல் இயலாது. தசரதனும், கைகேயியும்-ஏன்? - உலகத்தாரனைவருமே கூடிக்கூட முடியை இராம னிடமிருந்து பறித்துப் பரதனுக்கு நல்கலாம். ஆனால், சுமித்திரை அச்செயலை ஏற்றுக் கொள்வதாக இல்லை. அவளைப் பொறுத்த வரை இராமனே இன்னும் மன்னவன்; அவன் காடு சென்றாலும் கவலை இல்லை; அவனே மன்னன். பிறரைப் பற்றி ஒரு வார்த்தை கூடக் குறையாகவோ பழியாகவோ கூறாமல், தன் மனக் கருத்தைச் சந்தருப்பம் வந்தபொழுது அழுத்தமாகக் கூறும் இம்மாதரசியின் வன்மை சிந்திக்கத் தக்கது.

ஒப்புயர்வற்ற பேச்சு

இராமனை மன்னன் என்று மதித்து அவன் ஏவலின் வழி நிற்க எனக் கட்டளை இட்டுவிட்ட பிறகு என்ன தோன்றிற்றோ தெரிய வில்லை, சுமித்திரைக்கு! உடனே தன் சொற்களை மாற்றிவிட்டு, வேறு கூறுகிறாள்.

"மகனே, இவன் பின்னே செல்வாயாக. ஆனால், தம்பி என்ற கருத்துடன் செல்லாதே! அடியானைப் போல ஏவல் செய். இவன் இவ்வயோத்திக்கு வருவதுண்டாயின், பின்னே வா. அவ்வாறில்லை யாயின், இவன் முன்னம் முடிந்திடு,” என்ற கருத்தில் இதோ பேசுகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/141&oldid=1496863" இலிருந்து மீள்விக்கப்பட்டது