பக்கம்:அரசியர் மூவர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சென்று அடங்கும். மயில் தன்னுடைய இயல்பான மென்மை, சாயல், அழகு ஆகியவற்றை மறைத்துக்கொண்டு நாடகத்தில் நடிப்பதற்காக ஏதோ ஒரு வேடத்தைப் புனைந்துகொண்டு நடிக்கத் தொடங்கி விட்டது என்ற பொருளைப் பெற வைக்கிறான். எனவே எந்தப்பாத்திரத்தை நாடக மயில் என்று உருவகித்தானோ அந்தப் பாத்திரம் தன் சுயரூபத்தை மறைத்துக் கொண்டு ஏதோ ஒரு பாத்திரத்தின் வேடத்தை ஏற்றுக்கொண்டு நடிக்கத் தொடங்கிவிட்டது. இப்பொழுது அந்தப் பாடலை விரிவாகக் காணலாம்.

மந்தரை என்ற கூனி கைகேயியின் மனத்தை பேதலிக்கச் செய்து கணவனிடம் இரண்டுவரங்களைப் பெறுமாறு துர்ப்போதனை செய்து விட்டுப் போய்விட்டாள். அவள் போன பிறகு நீண்ட நேரம் கழித்துத் தசரதன் கைகேயிடம் வருகின்றான். அவன் வருவதற்குச்சற்று முன்னர் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு கைகேயி தன் அணிகலன்களை எல்லாம் களைந்துவிட்டு நெற்றிப்பொட்டையும் அழித்து விட்டுக் கூந்தலை அவிழ்த்து விரித்தபடி தரையில் கிடக்கிறாள். இக்காட்சியைக் கம்பன் வருணிக்கும் முறை வருமாறு:

. . . நவ்வி வீழ்ந்தென, நாடக மயில் துயின்றென்ன
'கவ்வை கூர்தரச் சனகியாம்கடி கமழ்கமலத்து
அவ்வை நீங்கும் என்று அயோத்தி வந்து அடைந்து அம்மடந்தை
தவ்வை ஆம்என, கிடந்தனள், கேகயன் தனையை. (1494)

இப்பாடலின் முதலடியைச் சற்றுச் சிந்திக்க வேண்டும். நல்வி என்றால் பெண் மான் என்று பொருளாகும். தலைவிரி கோலமாகக் கீழே கிடக்கும் கைகேயியை உருவகம் செய்கிறான் கவிஞன். ஒரு பெண் மான் கீழே விழுந்து கிடப்பது போலவும் நாடகத்திற்குரிய வேடமணிந்த மயில் உறங்குவது போலவும் கிடந்தாள் என்று பேசுகிறான். கவிஞன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/55&oldid=1495848" இலிருந்து மீள்விக்கப்பட்டது