பக்கம்:அரசியர் மூவர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கைகேயியை நவ்வி (பெண் மான்) என்று உருவகிப்பதும் சிந்தனையைத் தூண்டுவதாகும். மான்கள் இயல்பாகவே மருண்டபார்வையும் குறிக்கோள் அற்ற முறையில் இங்கும் அங்கும் ஒடித்திரியும் இயல்பும் உடையவனவாம். மருண்ட பார்வை எதனால் வருகிறது? எங்கே ஆபத்து மறைந்து கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் காரணமாக பார்வையில் மருட்சி ஏற்படுகிறது. இன்னது செய்வது என்ற முடிவிற்கு உறுதியுடன் வரமுடியாமையால் இங்கும் அங்குமாக ஓடுகின்ற இயல்பைப்பெற்றுள்ளது. உருவகிக்கப்பட்ட மானுக்கு உள்ள இந்த இரண்டு இயல்புகளையும் கைகேயிக்கு ஏற்றிப் பார்க்கலாம். இதுவரை கைகேயியின் வாழ்க்கை அமைதியான நீரோட்டம் போல் சென்று கொண்டிருந்தது. மன்னர் மன்னனாகிய தசரதன் தன் அருமைக்கணவன். புவிக்கெலாம் வேதமே என்று சொல்லத்தக்க இராகவன் மைந்தன். இதனால் ஏற்பட்ட மன அமைதியில் அவள் வாழ்க்கையில் மருட்சிக்கு இடமேயில்லை. ஆனால் இப்பொழுது ஒரு தலைகீழ் மாற்றம் நிகழ்ந்துள்ளது. கணவன் எண்ணத்திற்கு மாறுபட வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. அருமை மைந்தன் இராமனைக் காட்டிற்கு அனுப்ப வேண்டிய இக்கட்டான நிலை. இவை இரண்டையும் செய்வது சரியா தவறா என்ற எண்ணம் மனப்போராட்டமாக அமைந்து விடுகிறது. எந்த முடிவிற்கும் வரமுடியாத போராட்டமாகும் இது. உறங்கும் போதுங் கூட கடைக்கண்ணில் அருள் வழியும் அதே கண்களில் இப்பொழுது மருட்சி தோன்றக் காரணமென்ன? தான் மேற்கொண்ட முடிவினால் யாருக்கு என்ன விளையுமோ என்ற அச்சங்காரணமாகக் கண்களில் மருட்சி தோன்றலாயிற்று. அவளுடைய மனப்போராட்டத்தையும் கண்ணிலுள்ள மருட்சியையும் விரிவாக எடுத்துக் கூறாமல் அவள் வீழ்ந்து கிடப்பதை நவ்வி வீழ்ந்தென. என்ற ஒரு சொல் மூலம் கவிஞன் பெறவைத்து விடுகிறான்.

மனப்போராட்டம், கண்ணில் மருட்சி என்ற இவ்விரண்டும் கூனி அவளைவிட்டுப் போனதிலிருந்து தசரதன் வருவதற்குச்சிறிது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/56&oldid=1495850" இலிருந்து மீள்விக்கப்பட்டது