116
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
நாங்கள் அரசுப் பொறுப்பேற்று ஆறு ஏழு மாதங்களில் தென் சென்னை பாராளுமன்ற இடைத்தேர்தல் வந்தது. அறிஞர் அண்ணா அவர்கள் அந்தத் தொகுதியிலிருந்து பதவி விலகியதால் ஏற்பட்ட அந்த இடைத் தேர்தலில், இவர்களுக்கு எப்படியோ மக்கள் தப்பித் தவறி வோட்டு போட்டுவிட்டார்கள். இந்தத் தேர்தலில் மக்கள் இவர்களைத் தோற்கடித்து விடுவார்கள் என்றெல்லாம் பேசப்பட்டன. ஆனால் தென் சென்னை பாராளுமன்ற இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நின்ற வேட்பாளர் அபரிமிதமான வாக்குகளைப்பெற்று பெரிய வெற்றியை அடைந்தார்கள். அது ஆறாவது மாதத்தில் மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின்பால் கொண்டிருந்த நம்பிக்கைக்கு ஒரு சான்றாகும்.
அதைத் தொடர்ந்து தென்காசியில் நடைபெற்ற இடைத் தேர்தல். அது காங்கிரஸ் கட்சியின் இடமாக இருந்தாலும் 500 வாக்குகள் வித்தியாசத்தில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் தோற்றிருந்தாலும் பிறகு நடைபெற்ற தென்காசி இடைத் தேர்தலில் ஏறத்தாழ 20,000 வோட்டுகள் வித்தியாசத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் அங்கு வாகை சூடியது என்பது மக்கள் கழகத்தின் மீது, கழக அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கைதான் காரணமாகும்.
பின்னர் சாத்தூரில் நடைபெற்ற இடைத்தேர்தல். அங்கு எங்கள் தோழமைக் கட்சிக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு அளித்தது. அங்கேயும் தோழமைக் கட்சியான சுதந்திராக் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது என்பதை அனைவரும் அறிவீர்கள்.
மாநகராட்சி மன்றத்திலும் இந்த ஆட்சிப் பொறுப்பை நாங்கள் ஏற்றபிறகு திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பேற்கிற அளவிற்கு பெரும்பான்மையான இடங்களைப் பெற்றதையும் யாரும் மறந்திருக்க முடியாது. நகராட்சி மன்றங்களில் நடைபெற்ற தேர்தல்களில் ஏழெட்டு இடங்கள்தான் அங்கு இருந்தன, இப்போது ஐம்பதுக்கு மேற்பட்ட நகராட்சி மன்றங்களில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் வீற்றிருக்கிறார்கள். இது மக்களுக்கு இந்த அரசின் மீதுள்ள நம்பிக்கைக்கு அடையாளம்தான்.