உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

115

வகையிலும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள், கண்டனத் தீர்மானத்தின் மீது பேசிய மற்றக் கட்சியினர், இந்த இரண்டு தீர்மானங்களையும் ஆதரிக்காத நிலையிலே பேசிய வேறு கட்சியினர் அத்தனை பேரும் இந்த அவையின் மரபு காப்பாற்றப்பட வேண்டு மென்பதிலே அழுத்தமான நம்பிக்கை வைத்து விவாதங்களிலே கலந்து கொண்டதற்காக அவர்கள் அனைவருக்கும் இதய பூர்வமான நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

நம்பிக்கை இல்லை என்று தெரிவித்து விடுகின்ற காரணத்தால், வெளியில் இருக்கும் தமிழ்நாட்டு மக்கள் எங்கள் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்லி விடுவார்கள் என்று மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களோ அல்லது எதிர்க் கட்சியில் இருக்கின்ற உறுப்பினர்களோ எண்ணுவது சரியாகாது. நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள்கூட சட்டமன்றத்தில் 7-3-1970 அன்று பேசுகின்ற நேரத்தில் ஒன்றைக் குறிப்பிட்டார்கள். "பிற மாநிலங்களில் கூட்டணி ஆட்சிகள் நடைபெறுகின்றன, திடீரென்று கவிழ்கின்றன; இடையிலே யார் மந்திரிசபை அமைப்பது என்ற நிலை எல்லாம் இருக்கும்போது இங்கே ஒரே ஆட்சி, நிலையான ஆட்சி இருக்கிறது. இதை நான் பாராட்டாமல் இருக்க முடியாது” என்று அவர்கள் குறிப்பிட்டார்கள். நிலையான ஆட்சி தொடர்ந்து இருக்கும் என்ற நல்ல நம்பிக்கையுடன் அவர்கள் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை நான் நன்றாக அறிவேன். ஆகவே, அந்தப் பாராட்டை அவர்கள் நிச்சயமாகத் திரும்பப்பெற மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு தமிழ்நாட்டு பெருமக்கள், வாக்காளப் பெருமக்கள் இந்த கட்சியின் மீது அல்லது இந்தக் கட்சியோடு தோழமை கொண்டிருக்கிற கட்சிகள் மீது அளவுகடந்த அன்பினைச் செலுத்தினார்களா இல்லையா, நம்பிக்கை வைத்தார்களா இல்லையா என்பதை நாம் உன்னிப்பார்த்திட எவ்வளவோ அளவுகோல்கள் இருக்கின்றன.