கலைஞரின் சட்டமன்ற உரைகள்
157
வேண்டாமா என்பதை நிர்ணயிக்கிற தேர்தல் என்று குறிப்பிட்டார்கள். அந்தத் தேர்தலில் ராஜாஜி கட்சியைச் சார்ந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டார். அதற்குப் பிறகு கூடிய சட்டமன்றத்தில் ராஜாஜி அவர்கள்தான் வேண்டுமா என்ற கேள்விக்குறியின் அடிப்படையில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்துவிட்ட காரணத்தினால் தான் வேண்டுமா வேண்டாமா என்கிற அந்தத் தீர்மானத்தை சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்க விரும்பினார்கள். இப்போது ஏற்பட்டிருக்கிற சூழ்நிலை அதுபோல் அல்ல. இப்போது ஏற்பட்டிருக்கிற சூழ்நிலை இந்த அவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம்
ஒன்றைக் கொடுத்து அதன்மீது அமைச்சரவை மீது பல குற்றச்சாட்டுகளைக் கூறவேண்டும் என்று கோரியவர்கள், இந்த அரசின்மீது பல குறைகளை எடுத்துக்காட்ட வேண்டுமென்று அறிவித்தவர்கள், அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் பேசுவதற்கான வாய்ப்பை இழந்துவிட்ட காரணத்தினால் ஏதோ நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதற்கே அரசுத் தரப்பில் இருக்கிற நாங்கள் இணங்க மறுத்துவிட்டோம் என்கிற ஒரு பழிச்சொல் இந்த அமைச்சரவை மீது விழுந்த நேரத்தில் நாங்கள் நம்பிக்கையில்லாத் தீரமானத்திற்கும் கண்டனத் தீர்மானத்திற்கும் என்றைக்குமே அஞ்சியவர்கள் அல்ல. அவைகளை எப்படியாவது தடுத்துவிட வேண்டுமென்ற கெட்ட நினைப்பு கொண்டவர்களும் அல்ல. அதிலிருந்து தப்பி ஓட வேண்டும் என்ற தகாப் போக்கினை நாங்கள் ஜனநாயகப் பண்பாக ஏற்றுக்கொண்டவர்களும் அல்ல என்பதை எடுத்துக் காட்டுகிற வகையில்தான் நம்பிக்கை கோருகிற தீர்மானத்தின் மூலம் எதிர்தரப்பிலிருக்கிற மாண்புமிகு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களையெல்லாம் எடுத்துச்சொல்ல வேண்டுமென்ற வாய்ப்பினை இன்றைக்கு வழங்கியிருக்கிறோம். இந்த வாய்ப்பினை எதிர்தரப்பிலுள்ள அனைவரும் நன் நன்கு பயன்படுத்திக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.