உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

237

அணுகாமல், நியாயத்திற்குப் புறம்பான செயல்கள் எங்கே நடைபெற்றாலும் அவைகளை மக்களின் பிரதிநிதிகள் அரசின் கவனத்திற்குக் கொண்டுவரவேண்டும்; அவர்கள் அரசு அதிகாரிகள் குறித்து எந்தவிதமான பரிந்துரைகளையும் அரசுக்குக் கொண்டு வரக்கூடாது என்பதை நான் பல தடவை வலியுறுத்திக் கூறியுள்ளேன். அந்தக் கருத்தில் இந்த அரசு மேலும் அழுத்தந் திருத்தமாக இருக்கும் என்பதை அறிவித்துக் கொள்கிறேன்' என்று நான் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாநாட்டிலே சொல்லி யாரும் தனிப்பட்டவர்களுக்கு, நியாயமற்ற காரியங்களுக்கு, தனிப்பட்ட காரியங்களுக்கு அதிகாரிகளை நாடக்கூடாது என்று சொன்னேன். அதை வைத்துக் கொண்டு சில உறுப்பினர்கள், திரு.வெங்கடசாமி உட்பட, சொன்னார்கள். "இதிலிருந்து இவர்கள் ஏற்கெனவே அப்படித் தலையிட்டிருக் கிறார்கள் என்று தெரியவில்லையா?” என்று சொன்னார்கள். அதற்கு இதுவா இதுவா அர்த்தம்? நீ கண்ணகிபோல் வாழ்க என்று சொன்னால், அவள் ஏற்கெனவே பாஞ்சாலிபோல் என்றா அர்த்தம்? நீண்டபயணம் போகிறவரைப் பார்த்து, "போகிற பாதையிலே ஒரு குறுக்குப் பாதை வரும், அந்தப் பாதைப் பக்கம் போகாதே” என்று கூறினால், அவன் அந்தப் பாதையிலே, போனான் என்றா அர்த்தம்? செய்யாதே என்றால், சொல்கிறவன், அதை ஏற்கெனவே செய்தான் என்று அர்த்தமாகாது. நான் தெளிவாகச் சொல்கிறேன், அப்படி யாராவது செய்திருந்தாலும் அது தவறுதான்.

டாக்டர் ஹாண்டே அவர்கள் ஒன்றைச் சொன்னார்கள். பண்ருட்டி நகராட்சித் தலைவர் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கடிதம் கொடுத்து அனுப்பினார் என்று. அது தவறு, நான் கண்டிக்கிறேன். ஆனால், ஒன்றை நான் சொல்கிறேன். அந்தக் கடிதத்தினைப் பெற்ற அதிகாரி எவரும் அந்தக் கடிதத்தின்படி நடந்து கொள்ளவில்லை என்பதை மட்டும் நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். எடுக்க வேண்டிய நடவடிக்கையை எடுத்திருப்பதாகத்தான் நான் அறிகிறேன். கடிதம் கொடுத்தது தவறு. நான் அதற்காக வருந்துகிறேன். அப்படி கடிதத்தின்படி நடந்திருந்தால், நிச்சயமாக அந்த அதிகாரிமீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். நல்லவேளையாக அதிகாரி