262
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
நடைபெற்றிருக்கின்றன; அமைப்புகள் ஒழுங்காக இருக்கின்றன என்றெல்லாம் திரு. மாரிமுத்து அவர்கள் நேற்றையதினம் சொன்னார்கள். நானோ, கழகப் பொதுச் செயலாளரோ மேடையில் இதுவரை எடுத்துச் சொல்லாத அளவுக்கு நேற்றைய தினம் இந்தக் கட்சியின் அமைப்பு முறைகளை சிலாகித்து திரு. மாரிமுத்து அவர்கள் பேசின காரணத்தினால்தான், என்னதான் அவர் இன்றைக்கு இந்த ஆட்சி நீடிக்கக் கூடாது என்று எடுத்துச் சொன்னாலும்கூட - உள்ளூர உள்ளூர - தொலையட்டும் - இவர்களைத் - தவிர வேறு யார் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தோடு இந்தப் பாராட்டுரைகளைச் சொன்னார்கள் என்றே நான் கருதுகிறேன்.
-
பெரியவர் மணலி அவர்கள் இங்கே சொன்ன கருத்துக் களுக்கு நான் ஏறத்தாழ உடன்படுகிறேன். நானோ, இந்தக் கழகப் பொதுச் செயலாளர் நாவலரோ இந்தக் கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களோ இன்றைக்கு பெரியவர் மணலி எடுத்துச் சொன்ன வேண்டுகோள்களைப் போன்று நாள் தவறாமல் இந்தக் கட்சியிலே இருக்கிற தொண்டர்களுக்கு எடுத்துச் சொல்லி வருகிறோம். ஆனால் ஒரு இயக்கம் என்றால் அந்த இயக்கத்திலே அத்தனைபேரும் நூற்றுக்கு நூறு சரியாக இருப்பார்கள், எந்தக் குறைபாடும் இருக்காது என்று யாரும் நம்பிடவும் கூடாது. அப்படி எதிர்பார்க்கவும் இயலாது. அந்தக் குறைபாடுகளை எல்லாம் களைகிற, திருத்துகிற தலைமை இருந்திடவேண்டும். ஆகவேதான் தமிழ்நாடு கம்யூனிஸ்ட்கட்சித் தலைவர் பெரியவர் மணலி அவர்களுடைய கருத்துக்களை நான் நூற்றுக்கு நூறு ஏற்றுக்கொள்கிறேன். திரு. லத்தீப் அவர்களும் அதே ரீதியில்தான் அறிவுரைகளைச் சொன்னார். நண்பர் செழியன் பேசுகிற நேரத்தில் கூட ஏதோ இந்த அரசின் மீது அவருக்குப் பொல்லாத ஆசை இருப்பது போலவும், அதை யாரோ கெடுக்கிறார்கள் என்பதைப்போலவும் சொன்னார்கள். நான் இதை எல்லாம் எடுத்துச் சொல்லக் காரணம் “நீங்கள் என்ன சொன்னாலும் திருந்திட மாட்டோம், நாங்கள் பிடித்ததுதான் பிடி, நாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றே கால்" என்றெல்லாம் பிடிவாதமாகச் சொல்லிக் கொண்டிருக்கிற அரசு இது அல்ல என்பதை இந்த அரசின் கடந்த கால வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் நன்கு தெரியும்.