உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

409

1957ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிந்து, அதற்கு முன்பு கேரள மாநிலப் பகுதிகளும், ஆந்திர மாநிலப் பகுதி களுமாக ஒருங்கிணைந்த சென்னை ராஜதானி, சென்னை ராஜ்யம் என்று அந்த பகுதிகள் இணைந்த ஒரு மாநிலமாக நம்முடைய தமிழகம் இருந்தபோது, மாநில அளவில் மொழி வாரியாக அவைகள் பிரிக்கப்பட்டு, மொழிவாரி மாநிலம் என்ற வகையிலே, மாநிலங்கள் ஒரு தனி ஸ்டேட் என்கிற அந்த உரிமையைப் பெற்று, 1957ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்று முடிந்து, பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் அமைச்சர் அவை 13-4-1957ஆம் ஆண்டு தோன்றுகிறது. அப்படி 13-4-1957 அன்று தோன்றிய காமராஜ் அவர்களுடைய அமைச்சர் அவையை எதிர்த்து 28-10-1957 அன்று 6 மாத காலத்தில் என்னுடைய மதிப்பிற்குரிய கம்யூனிஸ்ட் கட்சி நண்பர் திரு. கல்யாணசுந்தரம் அவர்கள் ஒரு நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை இந்த மன்றத்திலே முன்மொழிந்தார்கள் என்பது அவைக் குறிப்பிலே காணக்கிடக்கின்ற ஒரு தகவல் ஆகும்.

அது மாத்திரமல்ல, பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தார்கள். அவர்கள் மறைந்த பிறகு, 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி நான் முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். 10ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இந்த மன்றத்திலே அதற்கு 15 நாட்கள் கழித்து, 25 ஆம் தேதி இந்த அமைச்சர் அவையின் மீது காங்கிரஸ் கட்சி ஒரு கண்டனத் தீர்மானத்தை இங்கே கொண்டுவந்தது. மாதக் கணக்குகூட இல்லை; நாள் கணக்கில், அதுவும் அண்ணா அவர்களை இழந்துவிட்டு, எப்படி அந்த ஆட்சிக் காலத்தை சுழற்றப் போகிறோம் என்று தவித்துக்கொண்டு, ஆட்சிப் பொறுப்பிலே அமர்ந்த நேரத்தில், எண்ணி 15ஆம் நாள் இந்த அமைச்சர் அவையின் மீது ஒரு கண்டனத் தீர்மானம் இந்த மாமன்றத்தில் வந்திருக்கிறது. அப்படி வரலாமா என்று நான் கேட்கவில்லை. அப்படி வரலாமா என்று கேட்டவர்களுக்கு, ஏற்கனவே முன் உதாரணங்கள் இருக்கின்றன என்பதை எடுத்துக் காட்டுவதற்காகச் சொல்கின்றேனே அல்லாமல், அவற்றை யெல்லாம் குறைகூற விரும்பவில்லை.