கலைஞரின் சட்டமன்ற உரைகள்
561
புண்களைப் பெற்றவர்கள் நீங்கள். 1932ஆம் ஆண்டு, அன்றிருந்த அடக்குமுறைச் சட்டம், கூட்டம், ஊர்வலம் இவைகள் நடத்துவதற்கு தடை உத்தரவு என்ற பெயரால் 144-வது சட்டப்பிரிவை உபயோகித்த நேரத்தில் அந்த உத்தரவை மீறி அன்றைக்கு கைதுசெய்யப்பட்டு சிறைக்கோட்டம் சென்றீர்கள். அந்தக் காலக் கட்டத்திலேதான் விடுதலைப் போராட்ட இயக்கத்திலே தமிழனுக்கும் பங்கு இருக்க வேண்டும்; தமிழ் மொழிக்கும் அந்த விடுதலை வீர உணர்வை உருவாக்குகின்ற ஆற்றல் உண்டு என்பதை நிரூபிக்கின்ற வகையில் “தமிழா, துள்ளி எழு” என்கின்ற தலைப்புள்ள ஒரு துண்டு அறிக்கை வெளியிட்டு, திருவல்லிக்கேணிப் பகுதியிலே அதைத் தங்கள் கையாலேயே விநியோகித்த நேரத்தில் கைது செய்யப்பட்டீர்கள். அதன் காரணமாகக் கொஞ்ச நாள் சிறைவாசம் அனுபவித்தீர்கள், 1941 ஆம் ஆண்டு இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, தாங்கள் அந்த எதேச்சாதிகார அரசாலே கைது செய்யப்பட்டீர்கள். 1942 விடுதலைப் போராட்டத்தில் தாங்கள் கைது செய்யப்பட்டு 15 மாதங்கள் சிறைச்சாலை, வேலூர் என்றும், தஞ்சாவூர் என்றும், அமராவதி என்றும் பல்வேறு சிறைச்சாலைகளில் அதிலும் தமிழகத்திலே இல்லாத வேறு மாநிலத்திலே உள்ள அமராவதி சிறைச்சாலையில், கொடுமையான சிறைச்சாலையில் 11 மாதங்கள் துன்பத்தை அனுபவித்து எடை குறைந்த நிலையில், ஆனாலும் எஃகு உள்ளம் மாறாத அளவு அன்றைக்குத் தியாக சீலராக அந்தச் சிறைச்சாலையிலே இருந்து வெளி வந்தீர்கள். இந்திய நாடு விடுதலை பெற்ற பிறகும்கூட, தங்களுடைய போராட்ட உணர்வு மங்கிவிடவில்லை. சுதந்திர இந்தியாவிலே போராடலாமா என்கின்ற அந்த எண்ணம் கிஞ்சித்தும் எழாமல், நல்லவை களுக்காக, தேவைகளுக்காக, உரிமைகளுக்காக எந்தக் காலத்திலும் போராடலாம் ; போராட்டத்திற்கும் சேர்த்துத்தான் சுதந்திரம் பெற்றிருக்கின்றோம் என்கின்ற அந்த உணர்வோடு, தேவிகுளம், பீர்மேடு தமிழகத்திலே இணைய வேண்டும் என்பதற்காகவும். திருத்தணி எல்லைப் பிரச்சனைக்காகவும், கன்னியாகுமாரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு சேர வேண்டும் என்பதற்காகவும் தாங்கள் நடத்திய போராட்டத்திலே திராவிட முன்னேற்றக் கழகமும் தங்களோடு தோளோடு தோள் நின்றது. எங்களை
19-க.ச.உ.(அ.தீ.) பா-2