உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/575

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

574

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

பொதுப்பிரச்சினையைப் பேசுகின்ற நேரத்திலே வேண்டுமானால் தோழமைக் கட்சிக்கு, எதிர்க்கட்சிக்கு அதிக நேரத்தை ஒதுக்குவதும், தொகுதிப் பிரச்சினையைப் பேசுவதற்கு எல்லாத் தொகுதியிலேயும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருக்கின்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பும் அளிக்க வேண்டியது மிக மிக அவசியமாகும். (மேசையைத் தட்டும் ஒலி) இல்லாவிட்டால் அவர்கள் தொகுதிப் பக்கமே போகமுடியாது. நிகழ்காலத் தேர்தலி லே நடைபெற்ற பல சம்பவங்களை நாம் பார்த்திருக்கின்றோம். (மேசையைத் தட்டும் ஒலி). எனவே, நீங்கள் எதிர்க்கட்சித் தலைவருடைய பேச்சை அப்படியே ஏற்றுக்கொண்டு அடுத்த தேர்தலில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எல்லாம் தொகுதிப்பக்கம் போக முடியாத ஒரு இக்கட்டை ஏற்படுத்திவிட வேண்டாம் என்று நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற திரு இளம்வழுதி, இன்றைக்கு மாண்புமிகு துணைத் தலைவராக ஆகியிருக்கிறார். அவரும் அமைச்சராக ஆகியிருக்கலாமே, ஒருவராக நின்று இங்கே போராடினாரே என்றெல்லாம் இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். நான், அவர் ஒருவராக நின்று இங்கே போராடியபொழுதெல்லாம் ஏடுகளில் எழுதி யிருக்கிறேன். மேடைகளில் பேசி இருக்கிறேன். 'என் தம்பி இளம்வழுதி இந்திரஜித்தினைப் போல நின்று போராடுகிறான்; அபிமன்யுவைப் போல நின்று போராடுகிறான்' என்று எழுதியிருக்கிறேன். அதைவிடவா இளம்வழுதிக்கு அமைச்சர் பதவி பெரிது என்று எனக்குத் தெரியவில்லை. (மேசையைத் தட்டும் ஒலி). பெரிது என்று கருதுவாரேயானால், அதை இங்கே வெளிப்படையாகச் சொல்வாரேயானால் இப்பொழுதேகூட மாற்றித்தர நான் தயாராக இருக்கிறேன் என்று கூறி, பெருமைக்கும், பேரன்புக்கும், பண்புக்கும் பாத்திரமான பேரவைத் தலைவர் திரு. பி. டி. ஆர். பழனிவேல் ராஜன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை வழங்குகிறேன். சிலர் தங்களை வாழ்த்த வயதில்லை என்று சொன்னார்கள். எனக்கு வயது இருக்கிறது. உங்களைவிட மூத்தவன் என்ற முறையிலே உங்களை நான் வாழ்த்துகிறேன். அதைப்போலவே துணைத் தலைவர் இளம்வழுதியையும் வாழ்த்துகிறேன். இந்த அவை எல்லா மாண்புகளோடும் சிறந்து விளங்க நல்ல முறையிலே வழிநடத்துங்கள் என்று உங்களைக் கேட்டுக்கொண்டு, மீண்டும் பாராட்டி, வாழ்த்தி அமைகிறேன், வணக்கம். (மேசையைத் தட்டும் ஒலி).