உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/634

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

633

'தமிழால் முடியும்' என்ற ஒரு அருமையான புத்தகத்தைத் தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கியவர் சி.எஸ். அவர்கள். இந்தித் திணிப்பால், இந்தி ஆதிக்கத்தால், ஆங்கிலம் அறவே அகற்றப் படுவதால் தமிழர்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டு விடுவார்கள் என்பதற்காக நடைபெற்ற அந்த மாபெரும் கிளர்ச்சியில், அந்தக் கிளர்ச்சிக்கு ஆதரவாகவோ அல்லது எதிர்ப் பாகவோ அல்லாமல் அந்தக் கிளர்ச்சியினுடைய காரணத்தை அகில இந்தியாவிலே உள்ள காங்கிரஸ் தலைமை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத் தன்னுடைய, பதவியை அழகேசன் அவர்களோடு சேர்ந்து அன்றைக்குத் துறந்த பெருமைக்குரியவர் சி.எஸ். அவர்கள் ஆவார்கள்.

கடைசியாக கடந்த 6, 7 ஆண்டுகளாக அவர்கள் அரசியலில் ஈடுபாடு இல்லாதவராக இருந்தாலும்கூட, ஆன்மீகத் துறை, பொதுத்துறை, பொது வாழ்வுத் துறை, அரசியலிலே ஈடுபட்ட அத்தனை பேருக்கும் அறிவுரை வழங்குகின்ற துறை, இதிலே ஒரு ஆசானாகவே அவர்கள் விளங்கினார்கள். என்னைப் பொறுத்தவரையில் இந்த 5, 6 ஆண்டு காலத்தில் அவர்கள் எனக்கு எழுதிய கடிதங்கள் எல்லாம் நான் என்றைக்கும் சேமித்து பொக்கிஷமாக வைக்க வேண்டிய கடிதங்களாகும். அந்த அளவிற்கு அறிவுரைகள், குறைகள் இருந்தால் அதனைச் சுட்டிக்காட்டுகின்ற மனப்பான்மை, அந்தக் குறைகளை எப்படி நிவர்த்திக்க வேண்டுமென்ற யோசனை சொல்கின்ற அந்த அறிவுக்கூறு இவை எல்லாம் அடங்கிய கடிதங்கள் ஏராளம் அவர்களால் எனக்கு எழுதப்பட்டிருக்கின்றன. அடிக்கடி அவரைச் சந்தித்து அவருடைய அறிவுரைகளைப் பெறுகின்ற வாய்ப்பை அண்மைக்காலமாக நான் பெற்றிருந்தேன். அந்த வாய்ப்பு இப்போது நழுவிவிட்டது என்கிற பெரு வருத்தத்திற்கிடையே உங்களிடையே நின்றுகொண்டிருக் கின்றேன். அவருடைய புகழ் என்றென்றும் நிலைக்கும், அவருடைய தியாகம் என்றென்றும் இந்தியத் திருநாட்டினுடைய இளைஞர்களுக்கு வழிகாட்டியாக அமையும் என்கின்ற அந்த உறுதியோடு அவருடைய குடும்பத்தாருக்கும், அவருடைய அருமைத் துணைவியாருக்கும், அவருடைய அருமைச் செல்வனுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அமைகின்றேன்.