11
புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி யெனும் வான்
புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்
தன்னெறி செலுத்துக வென்ற வென்னரசே
தனிநடராஜ வென் சற்குரு மணியே.
நால்வருண மாச்சிரம மாசார முதலா
நவின்றகலைச் சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே
மேல்வருணந் தோல்வருணங் கண்டறிவா ரிலைநீ
விழித்ததுபா ரென்றெனக்கு விளம்பிய சற்குருவே
கால்வருணங் கலையாதே வீணிலலை யாதே
காண்பனவெல் லாமெனக்குக் காட்டியமெய்ப் பொருளே
மால்வருணங் கடந்தவரை மேல்வருணத் தேற்ற
வயங்கு நடத்தரசே யென்மாலை யணிந் தருளே
சாத்திரங்க ளெல்லாந் தடுமாற்றஞ் சொல்வதன்றி
நேத்திரங்கள் போற்காட்ட நேராவே—நேத்திரங்கள்
சிற்றம்பல வன்றிருவருள் சீர்வண்ண மென்றே
உற்றிங் கறிந்தே னுவந்து
“மதமெனும் பேய் பிடித்தாட்ட ஆடுகின்றோர்” தம்மை நோக்கி,
“பேருற்ற உலகில் உறுசமய மதநெறி எனும் பேய்ப் பிடிப்பற்ற பிச்சுப்பிள்ளை விளையாட்டென” உணர்ந்திடுவீர் என்றும், “பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடும் ஓர் பவநெறி இதுவரை பரவியது, இதனால் சென்னெறி அறிந்திலர் இறந்திறந்து உலகோர் செறி இருள் அடைந்தனர் ஆதலின்” “திரு அருள் நெறி” கூறுகிறேன் கேண்மின்:
“சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திரச் சந்தடி-