உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருட்பெருஞ்ஜோதி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வள்ளலாரின்‌ வாய்மொழிகள்‌

தயவுக்குத்‌ தடைகள்‌ - ஜாதி, சமயங்கள்‌

தத்துவ ஒழுக்கம்‌ பற்றிச்‌ சமயங்கள்‌ ஏற்படுத்‌தப்பட்டிருக்கின்றன. தொழில்‌ ஒழுக்கம்‌ பற்றிச்‌ ஜாதிகள்‌ ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. தயவை விருத்தி செய்வதற்குத்‌ தடையாயிருப்பன - சமய ஏற்பாடு, ஜாதி ஏற்பாடு முதலிய கட்டுப்பாடு ஆசாரங்கள்‌. அவையாவன:

ஜாதியாசாரம்‌, குலாசாரம்‌, ஆசிரமாசாரம்‌, லோகாசாரம்‌, தேசாசாரம்‌, கிரியாசாரம்‌, சமயாசாரம்‌, மதாசாரம்‌, மரபாசாரம்‌, கலாசாரம்‌, சாதனாசாரம், அந்தாசாரம்‌, சாஸ்திராசாரம்‌ முதலிய ஆசாரங்கள்‌.

ஆதலால், மேற்குறித்த ஆசாரங்கள்‌ ஒழிந்து, சுத்த சிவ சன்மார்க்க சத்திய ஞான ஆசாரத்தை வழங்கிப்‌ பொதுநோக்கம்‌ வந்தால்‌, மேற்படி காருண்யம்‌ விருத்‌தியாகிக்‌ கடவுளருளைப்‌ பெற்று, அனந்த சித்தி முத்திகளைப்‌ பெறக்கூடுமேயல்லது, இல்லாவிடில்‌ கூடாது.

சமய நூல்களில்‌ பிழை

சமய மத சாத்திரங்களில்‌ அநேக இடங்களில்‌ பிழைகள் இருக்கின்றன. அதற்குக்‌ காரணம்‌ அவற்றை இயற்றியவர்கள்‌ மாயையின்‌ சம்பந்தத்தை அடைந்திருந்தவர்கள்‌. ஆகையால்‌, முன்னுக்குப்‌ பின்‌ மறைப்புண்டு தப்புகள்‌ நேரிட்டிருக்கின்றன.