16
மாயையை வென்ற சுத்த ஞானிகளுக்கல்லது மற்றவற்குப் பிழையற இயற்ற முடியாது. அந்தப் பிழைகள் சுத்த சன்மார்க்கம் விளங்குகிற காலத்தில் வெளிப்படும்.
தென்மொழி
இடம்பத்தையும், ஆரவாரத்தையும், பிரயாசத்தையும், பெருமறைப்பையும், போதுபோக்கையும் உண்டுபண்ணுகின்ற ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்லவொட்டாது, பயிலுவதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய் பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமையுடையதாய் சாகாக்கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழியொன்றனிடத்தே மனம் பற்றச்செய்து, அத்தென்மொழிகளாற் பல்வகை தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித்தருளினீர்.
சுத்த சன்மார்க்கப் பிரார்த்தனை
ஒருவன் பிரார்த்தனை செய்வதில் அவனுக்கு மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகமெல்லாம் வாழும்படி பிரார்த்தனை செய்யவேண்டும். அப்படி செய்வதால், ஒருவனுக்கு வேண்டியவையெல்லாம் அடங்கிவிடுகின்றன. பிரார்த்தனை செய்யவேண்டுமெனில், இப்படித்தான் செய்யவேண்டும்.
★