பக்கம்:அருமையான துணை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புத்திசாலி

21

இந்த நாட்டிலே அதிகமாக, மலிவாக, உற்பத்தியாவது பிள்ளைகள் மட்டுமல்ல; போதனைகள், உபதேசங்கள், பொன் மொழிகள் கூடத்தான் என்று அவன் குறித்துக்கொள்ள அனைவரும் வாய்ப்புத் தந்தார்கள்.

‘அப்பனே, இது மாதிரிப் பத்திரிகை எடுபடாது. இந்த நாட்டு மக்களுக்குத் தேவையான தகவல், செய்திகள் சுவையான விஷயங்களே வேறே. சினிமா நடிகை எந்தப் பாவில் குளிக்கிறாள், எப்படிக் குளிக்கிருள் அல்லது குளியாமல் இருக்கிறாள். எந்த நட்சத்திரம் என்னென்ன செய்கிறார், என்ன உளறுகிறார் என்பன போன்ற அறிந்துகொள்ளப்பட வேண்டிய அதி அவசரச் சேதிகளைத் தேடிப்பிடித்துச் சுடக் சுடக் கொடுக்கவேண்டும். சிங்காரி, ஒய்யாரி மேனிமினுக்கி வகையறாவின் எடுப்பான போஸ்களைப் படம் பிடித்துப் போட வேண்டும். நகைச்சுவையின் பேரால் வளர்க்கப்படுகிற உளறல்-பேத்தல்-அபத்தம்-கோமாளிக் கூச்சல்களை எல்லாம் தொகுத்துக் கொடுக்கவேண்டும்...' இப்படி அருளுரைகள் வழங்கினார்கள்.

‘உங்கள் அலுவல்களே நீங்கள் பாருங்கள். என் காரியத்தை நான் கவனிப்பேன்’ என்று அவன் சொன்னான்.

‘மடையன். உலகம் தெரியாத முட்டாள். உருப்படத் தெரியாத மண்டூகம்' என்று மற்றவர்கள் குறைகூறிவிட்டு, தங்களுக்குள் அவனைப்பற்றி இஷ்டம்போல் பேசினார்கள்.

‘நாங்கள் என்ன சொன்னோம்? அப்பவே சொல்லவில்லையா?' என்று அவர்கள் கொக்கரிப்பதற்குக் காலம் துணைபுரிந்தது.

நடக்க முயன்ற சுயம்புலிங்கப் பத்திரிகை தள்ளாடி விழுந்து, படுத்து, ஒரே கிடையாய்க் கிடந்து முடிந்தது.

அவன் வேறு முயற்சிகள் செய்து புத்தக வெளியீட்டகம் ஒன்று தொடங்கினான். ‘சிந்தனைத் தீவட்டி‘ என்ற பெயரில் சுடர்ப்பொறிகளையும், சத்திய வாக்குகளையும் நூல்களாக உலுப்பித் தள்ளினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/30&oldid=970566" இலிருந்து மீள்விக்கப்பட்டது