பக்கம்:அருமையான துணை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உருப்படாத பயல்

31


இதுக்காகவும் சொக்கையா வருத்தப்படவில்லை.

அவர் பணிபுரிந்துகொண்டிருந்த ஓட்டலில் தண்ணீர் எடுத்து வருவது, பாத்திரங்களைத் துலக்குவது, பெருக்குவது போன்ற அலுவல்களைக் கவனிக்க ஒரு அம்மாள் இருந்தாள். பார்க்க இலட்சணமாகத்த்தானிருந்தாள். அவள் அவனை கவனித்து வந்தாள். அவன் தோற்றமும் பேச்சும் இயல்புகளும் அவளுக்கு பிடித்திருந்தன. பரிவுடன் பேசி பேசி அவன் வரலாற்றை அவள் தெரிந்து கொண்டாள். ’கல்யாணம் செய்து கொள்ள வேண்டாமா தம்பி? எத்தனை நாளைக்கு இப்படியே இருப்பே?' என்ற பேச்சு கொடுத்து அவன் மனசை அறிந்து கொண்டாள்.

ஒருநாள் அவனை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். ஏழைக் குடில்தான். அங்கே ஆட்டுரலில் தோசைக்கு மாவு ஆட்டிக்கொண்டிருந்த சிறு பெண் அவன் பார்வையில் பட்டாள். ’என் மகள் தான். தங்கம்னு பேரு' என்றாள் தாய்.

இருவரும் பார்த்துக்கொண்டார்கள். சொக்கையா, தங்கம், தாய் மூவருக்கும் பரஸ்பரம் பிடித்துப் போயிற்று.

அதிக தடபுடல் இல்லாமல், சொக்கலிங்கம் தங்கத்தை கல்யாணம் செய்துகொண்டான். இவ்விஷயத்தை அவன் மூடி மறைக்கவும் இல்லை.

அவனுடைய ஊர்க்காரர்கள் மீண்டும் சலசலத்தார்கள். அம்மையார்கள் பொரிந்து கொட்டினார்கள், ’அவ என்ன சாதியோ என்ன எழவோ! இவனுக்கு மூளைபோன போக்கைப் பாரேன்,.,'வகையரா.

’சாதியாவது, சமயமாவது!' என்று சிரித்தான் சொக்கலிங்கம். 'தங்கம் நல்ல பெண். அதுதான் முக்கியம்.'

யெருவாக்கெட்டப்பய! இவன் மூஞ்சியிலே முழிச்சாலும் ஆகாது. நம்ம குலப்பெருமை என்ன! நம்ம குடும்பம் இருந்த இருப்பு என்ன? இந்தக் கரிமுடிவான் சாதிகெட்டவ எவளோ பெத்ததைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு நிக்கானே!" என்று கொதித்தாள் ஒரு அக்காள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/40&oldid=1242860" இலிருந்து மீள்விக்கப்பட்டது