பக்கம்:அருமையான துணை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

அருமையான துணை

மானத்தையும் வாங்கும்படியாக் காரியம் பண்ணித் திரியுதே என்று முன்னுரை கூறித் தனிப் புராணம் படித்தார்கள்.

அதைக் கேள்விப்பட்ட சொக்கையா சிரித்தான். 'நாங்க ராசாக்கள் பரம்பரை. எங்க முப்பாட்டனார். அவருக்கு முற்பட்ட பாட்டனார் எல்லாம் குதிரையிலேதான் சவாரி போவது வழக்கம்னு சொல்லிக்கிட்டு, இன்னய அன்னக்காவடிப் பய தன் பின்புறத்தை சுகமாத் தடவிக்கிட்டு நின்னான்னு சொன்னா, அது பெருமைக்குரிய செயலாக ஆகுமா ஐயா! பின்னே போட்டு பேசுதீரே, வாஸ்தவம், அவுகள்ளாம் திசை கட்டி ஆண்டாக இருக்கட்டுமே. இன்னிக்கு ஐயாவாள் பாடு பட்டு உழைக்கலேன்னா, பட்டினிதானேவே கிடக்கணும்?' என்றான் குறைகூறிய ஊர்க்காரர் ஒருவரிடம்

'புத்தியாய்ப் பிழைக்கத் தெரியாத கழுதை, உருப்படாத பயல்!' என்று முணுமுணுத்தபடி போனார் அவர்.

காலம் ஒடிக்கொண்டிருந்தது.

சொக்கலிங்கம் தனக்குரிய தேவைகளை தானே பூர்த்தி செய்துகொள்வது என்ற தீர்மானத்துடன் வாழ்க்கைப் பாதையிலே அடி எடுத்து வைத்தவன். அவனே குறை கூறவும், அவன் செயல்களை விமர்சிக்கவும் ஆட்கள் இருந்தார்களே தவிர, அன்போடு அவன் பிரச்சினைகளை ஆராய்ந்து, அவனுக்கு உதவிபுரிவதற்கு எவருமிலர்.

'இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. எங்க தாத்தா அல்லது அப்பா சொத்து தேடி வைத்துவிட்டுப் போயிருந்தால்-நான் பெரிய வீட்டுப் பிள்ளை ஆக இருந்தால்-என்ன கவனிக்க ஆட்கள் வருவாங்க. அதிர்ஷ்ட சீட்டிலோ அல்லது ஏமாற்று வியாபாரத்திலோ, எனக்கு ஆயிரம் ஆயிரமாப் பணம் கிடைக்க வழி ஏற்பட்டிருந்தாலும், ஐயா-ராசான்னு சொல்லிக்கிட்டு பல பேரு வருவாங்க. அத்தைகளும், அக்காள்களும் கல்யாணம் பண்ண வேண்டாமா? அங்கே பொண்ணு இருக்கு; இங்கே பொண்ணுயிருக்குன்னு நச்சரிப்பாங்க. வெறும் நபரான என்னை ஏன் அவங்க அணுகப் போருங்க?" என்று அவன் எண்ணினான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/39&oldid=1444694" இலிருந்து மீள்விக்கப்பட்டது