பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105/நானறிந்த பாரதிதாசனார்



தெரிந்தவர்களையெல்லாம் 'குயில்’ இதழின் உறுப்பினர்களாகச் சேர்த்து உதவினேன்.

இன்னும் எனக்குத் தெரிந்த எத்தனையோ செய்திகளை நான் இந்தச் சுருங்கிய கட்டுரையில் தெரிவிப்பதற்கில்லை. அவர் படக்காட்சித் துறையில் இறங்காமலிருந் திருந்தால் நூற்றாண்டுகட்கு மேலும் வாழ்ந்திருக்கலாம். அவருடைய உடற்கட்டும், உள்ள உறுதியும் அத்தகையன. "நான் எந்தக் கட்சியினையும் சார்ந்தவனல்லன்" என்று அவர் தம்முடைய இறுதிக் காலத்திலேயே தெரிவித்திருந்தார். அவர் நம் தமிழ் நாட்டுக்காகவும், தமிழுக்காகவும் இதுவரையில் புரிந்துள்ள தொண்டுகளே என்றும் அழியாமல் நிலைத்து நிற்கக்கூடியனவாக உள்ளன. தமிழ் நாட்டார் அனைவரும் அவருக்குக் கடமைப் பட்டவர்கள் ஆகின்றார்கள். தம் கருத்துக்களைப் படக் காட்சிகளின் மூலம் நம் நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அவர் எண்ணியிருந்தார். படத்தொழிலில் ஈடுபட்டுள்ள பேரன்பர்கள் 'பாண்டியன் பரிசு’ என்பதனைப் படமாக எடுக்க முன்வந்தால் அவருடைய இறுதிக்கால எண்ணத்தை நிறைவேற்றி வைத்தவர்களாவார்கள்.

அவர் சென்னையிலே 'கவிஞர் மாநாடு' ஒன்றினைக் கூட்ட எண்ணியிருந்தார். இராசீபுரக் கவிஞர் அரங்கசாமி என்பவர் அதற்காகவே சென்னைக்கு வந்திருந்தார். தலைவர், திறப்பாளர், பேச்சாளர், மாநாடு நிகழ்த்த வேண்டிய நாள், முதலிய பலவற்றையும் கவிஞர் அரங்கசாமி அவர்களைக் கொண்டு பாவேந்தர் முடிவு செய்து வைத்திருந்தார். அந்த மாநாட்டினை மாணவர் மன்ற நிலையத்திலேயே நடத்துவது என்றும் நம் பாவேந்தர் எண்ணியிருந்தார். அந்த எண்ணம் நிறைவேறுவதற்குள் நம் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் நம்மைவிட்டு மறைந்து விட்டார். பாவேந்தருக்கு இறுதிமரியாதை புரிவதற்காக மாணவர் மன்றச்சார்பில் நான் சென்றிருந்தேன்.அப்போது அவர்