பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123/இன்ப இரவு



நம் கலைகள், இலக்கணங்கள், இலக்கியங்கள் என்பவை இன்று நமக்குக் கேடாகவும், நம் இழிவுக்கும், மடமைக்கும், அடிமைத்தனத்துக்கும் ஆக்கமும், ஊக்கமும் தருவனவாகவும் இருப்பதற்குக் காரணம் அவை பார்ப்பனர்களாலும், மதவாதிகளாலும், இராஜாக்கள், செல்வவான்கள் ஆகியோர்களாலும் தோற்றுவிக்கப்பட்டவையும் கையாளப்பட்டவையுமேயாகும்.

மற்றும் இவர்களைப் பற்றிய விபரங்களையும், நாம்செய்ய வேண்டியவைகளையும் ஒரு மாதத்திற்குமுன் குடியரசில் நான் எழுதியிருப்பதுபோல் சமீபத்தில் கூட்டப்படப்போகும் முத்தமிழ் நுகர்வோர்-அதாவது இசை நுகர்வோர், நடிப்பு நுகர்வோர். பத்திரிக்கை வாசிப்போர் ஆகியவர்கள் மாநாட்டில் தெளிவுபடுத்த இருக்கிறேன்.

நீங்கள் ஆரம்பித்திருக்கும் இந்தக் காரியத்திற்கு, தமிழினிடத்தில் உண்மைப்பற்றும், தமிழும் தமிழர்களும் மேன்மை அடையவேண்டும் என்ற உண்மைக்கவலையும் உள்ள ஒவ்வொரு சுத்தமான தமிழ்மகனும் ஆதரிக்கக் கடமைப்பட்டவனாவான்.

உங்களுக்கு நண்பர் பாரதிதாசன் அவர்கள் கிடைத்திருப்பது உங்கள் நல்வாய்ப்புக்கும் உங்கள் வெற்றிக்கும் அறிகுறியாயிருக்கும். இன்று. இந்த நாட்டில் தமிழும், தமிழ்க்கவியும், தமிழ் இசையும், தமிழர்களுடைய முன்னேற்றத்துக்கும், தன்மானத்துக்கும் பயன்படும்படி மக்கள் உணர, உழைக்க ஏற்ற கவிகள் செய்து மக்களை ஊக்குவிக்க அவர் ஒருவரே என் கண்ணுக்குத் தென்படுகிறார், அவரை நாம் பயன்படுத்திக் கொள்வதில்தான் நம் வெற்றியின் தன்மை இருக்கிறது.

உங்கள் கழகம் வெற்றி அடையத் தளரா முயற்சி, ஒற்றுமை, கட்டுப்பாடு என்பவைகளோடு ஒழுக்கம், நாணயம் என்பவைகளும் தக்கபடி கவனித்துப் பின்பற்ற வேண்டியதாகும். இம்மாதிரி பணிகளுக்கு என்னால் ஆன உதவியைச் செய்ய எப்போதும் காத்திருக்கிறேன்.