பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

157/பாவேந்தருடன் ஒருநாள்



"எல்லாப் புலவர்களுமே கிறுக்குப் பிடித்தவர்கள்தாம்! ஆங்கிலப் புலவனும் இதற்கு விதி விலக்கல்லன்! போப் என்ற புலவரைப்பற்றிப் போலிங் புரூக் என்ற அம்மை யார் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா? “அவர் சில வேளைகளில் அமைதியே உருவாக இருப்பார்; வேறுசில வேளைகளில் குரைப்பார்!" (Sometimes he is polite and sometimes barks like a dog.)

"அப்படியானால் பாரதிதாசனும் நாம் போய்ப்பார்த்தால் எரிந்து விழுவாரா?' - இது என் ஐயவினா.

"அத்தோடு விட்டால் போதும்!’’-இது என்நண்பரின் விளக்கம். இது நடந்த பின்னும் அவரைப் பார்த்துப் பேசிப் பழக வேண்டும் என்ற எண்ணம் மட்டும் குறையவே இல்லை, 'ஆசை வெட்கமறியாது’ என்று நாட்டுப் புறத்தில் ஒருபழமொழி உண்டன்றோ?

1962மே 16 ஆம் நாள்! சென்னைத் தியாகராயநகர் இராமன் தெருவில் குடியிருந்த வீட்டுக்கு அவரைப் பார்க்கக் கிளம்பினேன். பத்தாண்டுகளுக்கு முன்னர் என் நண்பர் காட்டிய 'பூச்சாண்டி’ என் மனத்திரையில் நிழலாடியது. பாசுவல் தம்மை முதன் முதலில் சந்திக்க வந்தபோது சான்சன் அவரை எவ்வளவு மானக் கேட்டையச் செய்தார்! ஆனால் அவர் விட்டாரா? அவருடைய உயிருக்குயிரான நண்பராக, அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதும் ஆசிரியராக பாசுவல் மாறிவிடவில்லையா? இந்த வரலாற்றைப் படித்திருந்த துணிவு 'பூச்சாண்டி'யின் மீது மின்னொளியைப் பாய்ச்சியது.

நான் புறப்படும் போது என் உறவினர்.ஒருவர் 'எதற்கும் தெரிந்தவரை அழைத்துப் போங்கள்;அவர் ஒருமாதிரி...” என்று சொன்னார். நான் காதில் போட்டுக் கொள்ள வில்லை. திடீரென்று மழைபிடித்துக் கொட்டத் தொடங்