பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவேந்தர் பாரதிதாசனை அறியாதார் இலர், அவரைப் போன்று தமிழுக்குத் தொண்டு செய்தவர் பிறந்ததும் இல்லை; இனிப் பிறக்கப் போவதும் இல்லை!

கல்வி பயிலும் போதே கவியரசருக்குத் தாய்மொழி மீது தணியாத பற்றும், கவிபாடும் வேட்கையும் நிறைந்திருந்தன. அதற்குத் தூண்டுகோலாய்ப் பாரதியாரின் கூட்டுறவு-புதுவையில் பாரதியார் புகலிடம் தேடிவந்த போது-ஏற்பட்டது. பாரதியாரின் பாடல்கள் இவருள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தன; இவரையும் எழுதத் தூண்டின.

செஞ்சொற்சுவை நனி சொட்டச் சொட்டச் சிறந்த தோத்திரப் பாடல்கள் பல அப்பொழுதே பாவேந்தர் பாரதிதாசன் பாடியுள்ளார். இவர் பிரெஞ்சு அரசாங்கத்தில் தமிழாசிரியர் பணியேற்றுச் சுமார் முப்பதாண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

தமிழாசிரியர் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது தன்மான இயக்கத் தொடர்பு இவருக்கு ஏற்பட்டது. இவருக்குத் தன்மான இயக்கத் தொடர்பு ஏற்பட்டது என்பதைவிட, இவர் உள்ளத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த தன்மான உணர்வு -- கொடுமையை எதிர்க்கும் துணிவு -- தாய்மொழிப்பற்று ஆகியவை இவரைத் தன்மானக் கவிஞராக ஆக்கின என்றே சொல்லலாம். அப்போது புதுவையில் வாழ்ந்த--பிரெஞ்சு மொழியும்