பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கள் தாத்தா திருவாளர் கனகசபை முதலியார் புதுவையில் பெரிய வணிகர்; மளிகை மண்டியின் உரிமையாளர். கப்பலில் சரக்கு ஏற்றி பிரெஞ்சு நாட்டுக்கு அனுப்பிவைப்பார். அவர் ஒரு முறை சரக்கு ஏற்றி அனுப்பிய கப்பல் கவிழ்ந்து போனதால் வளமான எங்கள் குடும்பமும் கவிழ்ந்தது. அப்போது எங்கள் தாத்தாவின் வயது எழுபது.

வேணு (எ) சுப்பராய முதலியார் எங்கள் பெரியப்பா. அவருக்கு மளிகைமண்டி வாணிகம்தொழில்; சோதிடம் துணைத்தொழில். மணிக்கணக்குச் சோதிடம் சொல்வதிலும், கோசாரபலன் கூறுவதிலும் வல்லவர். புதுவைப் பிரமுகர்களான திருவாளர்கள் ஞாந்தியா முதலியார், சின்னையா முதலியார் ஆகியோர்க்கு இவர் குடும்பச் சோதிடர். இரட்டைக் குதிரைகள் பூட்டிய சாரட்டில் அவர்கள் வீட்டுக்குச் சென்று சோதிடம் சொல்லிவிட்டுத் திரும்புவார். என் தந்தையார்க்குச் சோதிடமெல்லாம் பிடிக்காது. என் பெரியப்பாவைப் பற்றி அவர் நகைச்சுவையாக அடிக்கடி ஒரு செய்தியைக் குறிப்பிடுவதுண்டு.

பெரியப்பாவும் என் தந்தையாரும் சிறுவர்களாக இருந்த போது நடந்தது இந்நிகழ்ச்சி. ஒருமுறை என்பெரியப்பா ஒருபெட்டியின் மீது அமர்ந்தபோது பெட்டிச் சந்தில் அவரது கை சிக்கிக் கொண்டதாம்; வலி பொறுக்க முடியாமல் 'முருகா! முருகா!' என்று கதறினராம்.