பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/68




விட்டுத் திடீரென்று ஒருநாள் புதுச்சேரிவந்தார். அவரே ஒட்டடை அடித்து வீட்டைத் தூய்மை செய்தார்; பால் வாங்கிக்கொண்டு வந்தார். பெண்பார்க்கும் படலத்தை உடனிருந்து நடத்தினார். திருமணத்தைப்பற்றி முதன் முறையாக என்னிடம் கேட்டபோது, ”அப்பாவைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது; அவரைத் தொடர்ந்து செல்வதில்தான் எனக்கு விருப்பம். அப்பாவைக் கேளுங்கள். அவர் விருப்பம் எதுவோ அதுதான் என் விருப்பம்”, என்று நான் சொன்னேன்.

பெரியாரைப் பின்பற்றும் தன்மான இயக்கத்தோழர்கள் சடங்குத் திருமணத்தை எதிர்ப்பவர்கள். ஆண் பெண் சமத்துவத்தை வற்புறுத்திப் பேசிய பெரியார் ’தாலி பெண்ணுக்குப் பூட்டப்படும் அடிமைச் சாசனம்’ என்று அடிக்கடி குறிப்பிடுவார். அதனால் சீர்திருத்தத் திருமணங்களில் அன்று தாலிகட்டும் நிகழ்ச்சி இடம் பெறுவதில்லை. எனது திருமணப்பேச்சு நடைபெற்றபோது தாலி அணிவதற்கு என் எதிர்ப்பைத் தெரிவித்தேன். அப்போது என் தந்தையார், ’கட்டிப்பாளையம் சிற்றூர் ஆயிற்றே! அங்கு ஏதாவது எதிர்ப்பும் பூசலும் ஏற்பட்டால் என்ன செய்வது?’ என்று கூறினார்.

"எதிர்ப்பதற்குத்தானே நாம் இருக்கின்றோம்’ என்று நான் சொன்னேன். பிறகு புலி வில் கயல் பொறித்த மூவேந்தர் சின்னத்தைத் தங்கத்தால் செய்து என் மங்கல நாணில் அணிவித்தார்கள். அதற்குப் பிறகு எங்கள் குடும்பத் திருமணங்களில் ’புலிவில்கயல்’ அணிவது வழக்கமாகி விட்டது.

திருமணம் முடிந்து முதன் முறையாக என் கணவரோடு பிறந்தகம் சென்று சில நாட்கள் மகிழ்ச்சியோடு தங்கியிருந்துவிட்டுப் புக்ககத்துக்குப் புறப்பட்டேன். இருபதாண்டுகள் இருந்து பழகிய வீட்டையும், உறவையும், குறிப்பாக என் அன்புத் தந்தையாரையும் பிரிந்து வருவது எனக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது; என்