பக்கம்:அருளாளர்கள்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


8 அருளாளர்கள்

‘அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே போன்ற அடிகள் இக்கருத்தை வலியுறுத்தல் காண்க. இறைவனைப் பற்றிய இவ்உண்மைகளை அறிவதற்கும் மெய்ப்பொருள் அறிவு பயன்படுகிறது.

இது நிற்க, இந் நிலைபெற்றோர் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை முறையையும் இன்பத்தையும் அடைகின்றனர் என்று கூறப்பெற்ற தல்லவா? எத்தகைய வாழ்க்கை அது? இவ்வுலகில் வாழும் ஏனையோர் வாழ்க்கையினும் மாறுபட்டதா? ஓரளவு மாறு பட்டதுந்தான். மற்றையோர் வாழுகிறபடிதான் இந்நிலை பெற்ற ஞானியும் வாழுகிறான். இருந்தாலும் என்ன வேற்றுமை; உடலில் அமைந்துள்ள பொறி புலன்களின் உதவியால் பிறர் வாழ்கின்றனர். ஆனால், மெய்ப்பொருள் அறிவுபெற்ற திருமூலர் போன்றோர் நம் போன்றவர் பெற்றுள்ள பொறி புலன்களுக்கு அப்பாலும் சிலவற்றைப் பெற்றுள்ளனர். அவை,

காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும் கோணாத போகமும் கூடாத கூட்டமும் நாணாத நாணமும் நாதாந்த போதமும் காணாய் எனவந்து காட்டினன் நந்தியே’

(திருமந்-1610)

என்று திருமூலர் கூறுகிறார். எனவே, பிறர் கண்டும் காணாதவற்றை இவர்கள் காண்கின்றனர்; கேளாதவற்றை இவர்கள் கேட்கின்றனர். இன்னுங் கூறப்போனால் பிறர் வெட்கப்படும் பொருளுக்கு இவர்கள் வெட்குவதில்லை யாம். இப்படி இருத்தலினால் பெறும் பயன் என்ன? பிறர் காணாதவற்றையும் கேளாதவற்றையும் கண்டும் கேட்டும் இருத்தலால் பெறும் பயன் என்னவாம்? இதோ விடை தருகிறார் திருமூலர். -