பக்கம்:அருளாளர்கள்.pdf/204

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளலார் கண்ட வாழ்வு நெறி 193

இப்போது பசுகரணங்களாக இல்லாமல் பதிகரணங்களாகி விட்ட நிலையில் வள்ளல்பெருமான் முழுவதுமாக மாறிவிடுகின்றார். இது ஆன்மீக வளர்ச்சியால் பெற்ற பயனாகும். இதனிடையே மற்றொன்றிலும் அவருடைய மனம் செல்கிறது.

சென்னைப் பட்டினத்தில் வாழ்ந்தவர் அவர். 'தேட்டிலே மிகுந்த சென்னை' (3467) என்று அவரே சொல்லுவார். ஆகவே இங்கே மக்கள் எந்த ஒன்றுக்கும் கவலைப் படாமல் மேலே மேலே சம்பாதிக்க வேண்டும் என்ற போட்டி சமுதாயத்தில் வாழ்கின்றவர்கள். அதனால் அவர்கள் தேட்டிலே சிறந்தவர்களாக இருக்கிறார்கள். இந்தத் தேட்டிலே மிகுந்த சென்னையில்தான் அவரது இடைக்காலம் சென்றது என்றால், அது ஏன்? அதிலிருந்து என்ன தெரிந்து கொள்கிறார்? அவருடைய வாழ்க்கையில் பெருமாற்றத்தை உண்டாக்கக் கூடிய சில சூழ்நிலைகள் இங்கே இருந்தன. -

முதலாவது வறுமை. இரண்டாவது உயிர்கள் படுகின்ற துன்பம். இந்த வறுமையும், துன்பமும் புதிதா? இல்லை. சங்ககாலம், அதற்கு முற்பட்ட காலத்திலிருந்தே வறுமை எல்லாரும் அறிந்த ஒன்றுதான். வறுமை என்பதும் உணவுக்கு மக்கள் திண்டாடுவதும், அதற்கு மறுதலையாக மக்களுக்கு உணவளிப்பதும் இன்று நேற்று தோன்ற வில்லை, என்றுமே இருந்து வருகின்ற ஒன்று.

அப்படியானால் நாயன்மார்கள், ஆழ்வார்கள் காலத்தில் வறுமை இல்லையா? இருந்தது. பின் ஏன் அவர்கள் அதைத் தீர்க்க விரும்பவில்லை. நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு சூழ்நிலையில் தனிப் பட்ட இடத்தில் பஞ்சம் என்ற ஒன்று ஏற்பட்டு விடுகிறது. பஞ்சம் என்பது சாதாரண நிலையைவிட மிக மோசமான ஒரு நிலைமை. அந்த நிலையில் ஞானசம்பந்தரும்,