வள்ளலார் கண்ட வாழ்வு நெறி . 213
புதுவையில் குள்ளச்சாமி என்ற சித்தரிடம் உபதேசம் பெற்றவருமாகிய கவிச்சக்கரவர்த்தி பாரதி இந்த சாத்திரங்கள் முதலானவற்றை எவ்வாறு சாடுகிறார் என்பதைப் பின்வரும் பாடல் நன்கு விளக்குகிறது. <poem> சாத்திரங் கோடி வைத்தாள் - அவை
தம்மினு முயர்ந்ததோர் ஞானம் வைத்தாள் பித்திடும் பொழுதினிலே - நான்
வேடிக்கை யுறக் கண்டு நகைப்பதற்கே கோத்த பொய் வேதங்களும் - பசுக்
கொலைகளும் அரசர்தம் கூத்துக்களும் மூத்தவர் பொய்ந் நடையும் - இள
மூடர்தம் கவலையு மவள் புனைந்தாள்
(கண்ணன் தாய்-9) மேலே காட்டிய உதாரணங்கள் ஓர் உண்மையை நன்கு விளக்குகின்றன. இறை உணர்வைப் பெறுவதற்கு சாத்திர சம்பிரதாயங்கள் சடங்குகள் என்பவை என்றுமே தடையாக இருந்தன. இருக்கின்றன என்பதை பலர் அறிந்து இருப்பினும் மிகத்துணிவோடு அதை எடுத்து கூறியவர்கள் நாவரசர், வள்ளலார், பாரதி ஆகிய மூவருமே ஆவர்.
இதனை இவ்வளவு விளக்கமாக சொல்லாவிட்டாலும் குறிப்பாக கண்ணப்பர் புராணத்தில் நுணுக்கமாக சேக்கிழார் வெளியிடுகிறார். ‘ஆகம ரீதியில் இறைவழிபாடு செய்த சிவகோசரியார் இறைவனைக் காணும் பேறு பெறவில்லை. சாத்திரவாடையே அறியாத திண்ணனார் ஆறே நாளில் இறைவனை நேரே காணும் பேறு பெற்றார். ஆகம சாத்திர வழியில் வழிபாடு செய்த திருநீலநக்கர் ஸ்தூல லிங்கத்தை வழிபட்டாரே தவிர இறைவனைக் காணவில்லை. சாத்திரத்தை சட்டை செய்யாத அவர் மனைவியார் திருலிங்கத் திருமேனி மேல் எச்சில்பட ஊதுவதன் மூலம் இறைக்காட்சி பெற்றார்.