பக்கம்:அருளாளர்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33* நடராஜ தத்துவம்


நடராஜ வடிவத்தைச் சுற்றி வளைந்திருப்பது "திருவாசி" எனப்படும். பல்வேறு அண்டங்கள் வடிவாக செறிந்து நிற்பதை பிரபஞ்சம் என்று கூறுகிறோம் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஓர் அடையாளம் தான் திருவாசி எனப்படும். இந்த வட்டத்தின் நடுவே பெருமான் நடனம் ஆடுகிறான். அப்பெருமானின் தொப்புள்தான் வட்டத்தின் மத்திய புள்ளியாகும். அதிலிருந்து ஆறு இடங்கள் இந்த திருவாசியை (பிரபஞ்சத்தை)தொட்டுக் கொண்டிருப்பதைக் காணலாம். 1.கீழே ஊன்றியிருக்கின்ற கால், 2. இறைவனின் திருமுடி, 3. உடுக்கை ஏந்திய கை, 4. அக்னியை ஏந்திய கை. 5. தூக்கிய திருவடி, 6. இடையில் கட்டியிருக்கும் புலிவால் ஆகிய இந்த ஆறும் சுற்று வட்டத்தை (திருவாசி) தொடுவது போல் அமைந்திருக்கும்.

இவற்றையெல்லாம் கற்பித்ததைவிட இன்னொரு அற்புதத்தையும் கற்பித்தார்கள். வட்டத்தைத் தொடும் இந்த ஐந்து பகுதிகளும் (புலிவால் தவிர) இந்த ஐந்தும் தொடும் பகுதிகளும் இறைவனின் வடிவத்தின் பல்வேறு பகுதிகள். இப்படிச் சொல்வதால் அவன் ஆடுகிறான் என்பதைக் காட்ட முடியாது. ஆடுகின்ற ஒரு குறிப்பிட்ட நிலையை (One Pose) தெரிவிக்குமே தவிர, ஒயாது ஆடுகிறான் என்பதை இவை அறிவிக்கமாட்டா. அதையும் அறிவிக்க விரும்பிய சிற்பி ஒரு அற்புதத்தைச் சாதித்தான். பெருமான் இடையில் கட்டியிருப்பது புலித்தோல் ஆடை அந்தப் புலியின் வால் தொங்கிக் கொண்டுதானே யிருக்கும். ஓயாது சுற்றும்போது, இடையில் கட்டிய சாதாரணத் துணி கூடத் தொங்கும் நிலையில் இருந்து ஒரு ஆரம்போல் வட்டத்தின் விளிம்பைத் தொடும் நிலைக்குச் (from prependicular to horizontal)சென்று விடும்.ஆகவே தொங்குகின்ற புலிவாலை தொங்கும் நிலையில் இருந்து ஓர் ஆரம்போல் விளிம்பைத் தொடுமாறு செய்து விட்டான். எனவே ஒயாது ஆடுகிறான் என்று அறிவிக்க, தொங்கு கின்ற புலிவாலை ஆரம் ஆக்குவதன் மூலம் நம் முன்னோர் நமக்குக் காட்டினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/42&oldid=1291404" இலிருந்து மீள்விக்கப்பட்டது